திருவாடானை, ஏப்.18: திருவாடானையில் இலவச உடற்பயிற்சி கூடம் அமைக்க வேண்டும் என இளைஞர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானையில் அதிகளவில் இளைஞர்கள் பள்ளி,கல்லூரி மாணவர்கள் வசித்து வருகின்றனர். தற்கால இளைஞர்கள் போதிய அளவில் உழைப்பு இல்லாத காரணத்தால் நடைபயிற்சி, உடற்பயிற்சி போன்றவைகள் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பெரிய நகரங்களில் தனியார் உடற்பயிற்சி நிலையங்கள் செயல்படுகிறது. மேலும் அரசு உடற்பயிற்சி கூடமும் செயல்படுகிறது. ஆனால் திருவாடானை போன்ற வளர்ந்து வரும் நகர் பகுதியில் இதுபோன்ற உடற்பயிற்சி கூடங்கள் இல்லை. எனவே அரசு சார்பில் இலவச உடற்பயிற்சி கூடம் அமைத்து தர வேண்டும் என இளைஞர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து திருவாடானை பகுதி இளைஞர்கள் கூறுகையில், பள்ளி மாணவர்கள் விளையாட்டு வீரர்கள் நடை பயிற்சியாளர்கள் மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் உடற்பயிற்சி செய்ய ஆர்வமாக உள்ளனர். ஆனால் செய்வதற்கு அதற்கு உரிய உபகரணங்களுடன் பயிற்சி கூடம் இல்லை. இப்பகுதியில் வசதியற்ற நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்கள் தான் அதிளவில் வசிக்கின்றனர். தேவையான உடற்பயிற்சி கருவிகளை சொந்தமாக வாங்கி வைத்துக் கொள்ள வாய்ப்பில்லை. எனவே திருவாடானை பகுதி இளைஞர்களின் நலன் கருதி உடனடியாக அரசு சார்பில் இலவச பயிற்சி கூடம் அமைத்து தரவேண்டும் என்றனர்.
The post திருவாடானையில் இலவச உடற்பயிற்சி கூடம்: இளைஞர்கள் வேண்டுகோள் appeared first on Dinakaran.