×

திருமூர்த்திமலை வரும் பக்தர்கள் எதிர்பார்ப்பு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கம்பிவேலிகள் மீண்டும் அமைக்கப்படுமா?

உடுமலை : திருமூர்த்தி மலை மீது அமணலிங்கேஸ்வரர் கோயிலை சுற்றி அமைக்கப்பட்டிருந்த கம்பிவேலி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. உயிர்ப்பலி ஏற்படும் முன்பாக கம்பிவேலியை மீண்டும் அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக திருமூர்த்திமலை அமைந்துள்ளது. திருமூர்த்தி அணை, நீச்சல் குளம், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அணை பூங்கா, மேலும் அமணலிங்கேஸ்வரர் கோயில், பஞ்சலிங்க அருவி என சுற்றுலா பயணிகளை மட்டுமின்றி பக்தர்களையும் பெரிதும் கவரும் இடமாக திருமூர்த்தி மலை திகழ்கிறது.சில மாதங்களுக்கு முன்பு பஞ்சலிங்க அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பாலாற்றில் பெருக்கெடுத்த வெள்ளம் அமணலிங்கேஸ்வரர் கோயிலை சூழ்ந்தது. வெள்ளம் காரணமாக பக்தர்கள், சுற்றுலா பயணிகள் கோயில் அருகே செல்லவோ, பஞ்சலிங்க அருவியில் குளிக்கவோ அனுமதி அளிக்கப்படவில்லை. காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் பாலாற்றின் கரைப்பகுதிகளில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.அமணலிங்கேஸ்வரர் கோயிலை சுற்றி ஓடும் பாலாற்று தண்ணீர் திருமூர்த்தி அணையில் சென்று கலக்கிறது. பாலாற்றில் ஆங்காங்கே பெரிய, பெரிய குழிகள் உள்ளன. வெளியூர் சுற்றுலா பயணிகள் கோயில் அருகே உள்ள பாலாற்றில் இறங்கி குளிக்கும் போது குழி இருப்பது தெரியாமல் நீரில் மூழ்கி உயிரிழக்க நேரிடுகிறது. யானை கஜம் என்றழைக்கப்படும் இத்தகைய ஆழம் தெரியாத குழிகளில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். இதனை தடுப்பதற்காக கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் பாலாற்றின் கரைகளில் இரும்புத்தூண்கள் நடப்பட்டு அதில் கம்பிவேலி அமைக்கப்பட்டிருந்தது. வெள்ளபெருக்கில் இவை அடித்து செல்லப்பட்டன. இவற்றை மீண்டும் அமைத்து கொடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சுற்றுலா ஆர்வலர்கள் மற்றும் பக்தர்கள் கூறுகையில், ‘‘அணைப்பகுதியில் அத்துமீறி குளிப்பவர்களை தடை செய்வதற்காக தடுப்புகள், இரும்பு கம்பி வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதே போல பாலாற்றின் கரையிலும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அத்துமீறி பாலாற்றினுள் இறங்கி குளிப்பதை தடுக்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இவை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் வெளியூர் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் ஆற்றில் குளிப்பதற்காக இறங்கி குழிக்குள் சிக்கி உயிரிழக்க கூடும். எனவே, இதனை தவிர்க்க மீண்டும் கம்பிவேலி அமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்….

The post திருமூர்த்திமலை வரும் பக்தர்கள் எதிர்பார்ப்பு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கம்பிவேலிகள் மீண்டும் அமைக்கப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Tirumurthimala ,Udumalai ,Amanalingeswarar Temple ,Tirumurthy Hill ,
× RELATED உடுமலை அரசு மருத்துவமனையில் சம்பளம் கேட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம்