×

திருப்புத்தூரில் கேஸ் இணைப்பை புதுப்பிக்க மழையில் காத்திருந்த பெண்கள்

திருப்புத்தூர், டிச.19: திருப்புத்தூர் சின்னத்தோப்பு தெருவில் அமைந்துள்ள எச்.பி. கேஸ் ஏஜென்சி அலுவலகத்தில், கேஸ் இணைப்பை புதுப்பிப்பதற்காகவும், சமையல் எரிவாயு இணைப்புடன் ஆதார் அட்டை இணைப்பதற்காகவும் பதிவு செய்ய நேற்று இங்கு பல கிராமங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பெண்கள் நீண்ட வரிசையில் மழையில் குடையுடன் நின்றனர். வீட்டில் சமையலுக்காக பெண்கள் பயன்படுத்தி வரும் எச்.பி. சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பை புதுப்பிக்கும் வகையில், இணைப்புடன் ஆதார் எண்களை இணைக்க வேண்டும், கைரேகை வைத்து புதுப்பிக்க வேண்டும்.

இறந்தவர்களின் பெயர்களிலும், வெளிநாடுகளில் உள்ளவர்களின் பெயர்களிலும் பல எரிவாயு சிலிண்டர் இணைப்புகள் இருப்பதாலும், இறந்தவரின் பெயரில் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் இருந்து வருவதாலும், அதை புதுப்பிக்க வேண்டும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனையடுத்து திருப்புத்தூர் எச்பி சமையல் எரிவாயு அலுவலகம் முன்பு பெண்கள் குவிந்தனர். வருகின்ற பிப்ரவரி மாதம் கடைசி தேதி வரை இணைப்பை புதுப்பிப்பதற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இணைப்பை புதுப்பிப்பதற்காக ஏராளமான பெண்கள் மழையையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து கைரேகை வைத்து தங்களது இணைப்புகளை புதுப்பித்து சென்றனர்.

The post திருப்புத்தூரில் கேஸ் இணைப்பை புதுப்பிக்க மழையில் காத்திருந்த பெண்கள் appeared first on Dinakaran.

Tags : Tiruputhur ,Chinnatoppu Street, Tiruputhur ,
× RELATED திருப்புத்தூர் சாலை விபத்தில் முதியவர் பலி; 3 பேர் படுகாயம்