×

திருத்தணியில் வீடு புகுந்து கொலை தொழில் போட்டியில் தீர்த்துக்கட்டினர்: 3 பேர் சிறையில் அடைப்பு

திருத்தணி, ஜூன் 4: ராணிப்பேட்டை மாவட்டம், சோகணூர் கிராமத்தைச் சேர்ந்த அருண் (30) என்பவர் திருத்தணி அருகே அகூர் காலனியில் வேலாயுதம் என்பவருக்குச் சொந்தமான இடத்திற்கு வாடகை செலுத்தி 2 ஆண்டுகளாக மாட்டு இறைச்சி விற்பனை கடை வைத்து வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு போட்டியாக அகூர் காலனியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் சூர்யா (24) சில மாதங்களுக்கு முன்பு மாட்டு இறைச்சி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இருப்பினும் அவருக்கு எதிர்பார்த்த வகையில் வியாபாரம் நடைபெறவில்லை என்று தெரிகிறது. இதனால், வெளியூர்காரரான அருணின் மாட்டு இறைச்சி கடையை காலி செய்ய வேண்டும் என்று வேலாயுதத்தை, சூர்யா தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலாயுதத்துடன் சூர்யா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு சென்ற வேலாயுதத்தின் உறவினர்களான ரவி (59), சுதாகர் (50) ஆகியோர் சூர்யாவுடன் வாக்குவாதம் செய்து அவரை அனுப்பிவைத்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த சூர்யா, அவரது நண்பர்கள் 4 பேருடன் குடிபோதையில் ரவியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்த ரவியை கத்தி மற்றும் இரும்பு ராடால் சரமாரியாக வெட்டி அவரை கொலை செய்துள்ளனர். மேலும் பெட்டிக்கடைக்காரர் சுதாகர் என்பவரையும் வெட்ட முயன்றுள்ளனர். அவர் அங்கிருந்து தப்பிச் சென்று கிராமத்தில் ஒரு வீட்டில் தஞ்சம் அடைந்தார். கிராம மக்கள் சுற்றி வளைத்ததால், குடி போதையில் இருந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். சம்பவம் குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் சூர்யா (23), ராஜேஷ் என்பவரின் மகன் விக்கி (எ) விக்னேஷ் உட்பட 3 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருத்தணியில் வீடு புகுந்து கொலை தொழில் போட்டியில் தீர்த்துக்கட்டினர்: 3 பேர் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Tags : Thirutani ,Arun ,Soganur village ,Ranipet district ,Velayutham ,Akur Colony ,
× RELATED மாவட்டம் முழுவதும் மழையால் சேதமான சாலைகள் சீரமைப்பு