×

திராவிட தமிழர் கட்சி சார்பில் சனாதன ஒழிப்பு ஆர்ப்பாட்டம்

கோவை, செப். 7: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசி இருந்தார். அதற்கு பல்வேறு இந்து அமைப்புகள், பாஜகவினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே அயோத்தியை சேர்ந்த சாமியார் ஒருவர் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில், கொலைவெறியை தூண்டும் விதமாக அந்த சாமியார் பேசி இருப்பதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திமுக உட்பட பல்வேறு திராவிட இயக்கங்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாநகர காவல் ஆணையாளர் அலுவலகங்களில் புகார் மனு அளித்து வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் சாமியாருக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் சாமியார் பேசியது சரி என்பது போல் பல்வேறு இந்து அமைப்புகள் தெரிவித்து வருவதால் இந்தியாவில் \”சனாதனம்\” என்ற வார்த்தை பேசு பொருளாகி உள்ளது. உதயநிதி ஸ்டாலினின் சனாதன ஒழிப்பு கருத்துக்கு ஆதரவு தெரிவித்து சனாதன ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தை திராவிடர் தமிழர் கட்சியினர் முன்னெடுத்துள்ளனர். அதன்படி, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் வெண்மணி தலைமை வகித்தார்.
இதில், ஆதி தமிழர் பேரவை பொதுச்செயலாளர் ரவிக்குமார், தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொருளாளர் சாஜித் உட்பட பலர் கலந்து கொண்டு சனாதன ஒழிப்பு குறித்தான பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்ட முழக்கங்களை எழுப்பினர். மேலும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அந்த சாமியாரின் புகைப்படத்தை எரிக்க முயற்சித்த போது போலீசார் தடுத்ததால் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

The post திராவிட தமிழர் கட்சி சார்பில் சனாதன ஒழிப்பு ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Sanatana ,Dravida Tamil Party ,Coimbatore ,DMK ,Udayanidhi Stalin ,Chennai ,
× RELATED 1.5 கிராம் உயர்ரக போதை பொருள் பறிமுதல்