×

திமுக சார்பில் மவுன ஊர்வலம் சென்னை அண்ணா சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு

 

சென்னை, ஆக.6: திமுக சார்பில் மவுன ஊர்வலம் நடைபெற உள்ளதால் அண்ணா சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக உறுப்பினர்கள் நாளை காலை 8 மணியளவில் அண்ணாசாலை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் உள்ள கலைஞர் சிலை அருகிலிருந்து மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடம் வரை மவுன ஊர்வலம் செல்கின்றனர்.

இது தொடர்பாக விரிவான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு, வாகனங்கள் எளிதாக செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனினும் தேவைப்படும்பட்சத்தில் போர் நினைவு சின்னத்தில் இருந்து நேப்பியர் பாலம் நோக்கி வரும் வாகனங்கள் காமராஜர் சாலை செல்ல அனுமதிக்காமல் கொடி மரச் சாலை வழியாக திருப்பி விடப்படும். காந்தி சிலையில் இருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் கண்ணகி சிலை வரை அனுமதிக்கப்பட்டு, பாரதிசாலை வழியாக திருப்பி விடப்படும். மவுன ஊர்வலம் வாலாஜா சாலைக்கு வரும்போது வாகனங்கள் அண்ணாசாலையில் இருந்து பெரியார் சிலை நோக்கி திருப்பி விடப்படும். அதனால் காலை நேரத்தில் அண்ணாசாலை, வாலாஜா சாலை, டேம்ஸ் சாலை, பிளாக்கர்ஸ் சாலை மற்றும் காமராஜர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் பயணத்தை திட்டமிடலாம், என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post திமுக சார்பில் மவுன ஊர்வலம் சென்னை அண்ணா சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : DMK ,Chennai Anna road ,Chennai ,Anna Road ,Dinakaran ,
× RELATED பவள விழாவை முன்னிட்டு நகர திமுக...