கரூர், செப்.15: தமிழ் வளர்ச்சிக்கு அரும்பாடுபடும் ஆர்வலர்களுக்கு தமிழ்ச்செம்மல் விருது வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதியானோர் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்வளர்ச்சி துறையில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களை கண்டறிந்து அவர்களின் தமிழ் தொண்டை பெருமைப்படுத்தி ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ்ச்செம்மல் என்ற விருது ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் தேர்வு செய்து, அவர்களுக்கு தமிழ்ச்செம்மல் விருதும், ரூ. 25 ஆயிரம் பரிசுத் தொகையும், தகுதியுரையும் 2015ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.எனவே, மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்காக பாடுபடும் ஆர்வலர்களை கண்டறிந்து அவர்களிடம் இருந்து தன் விபரக்குறிப்புகளுடன் விண்ணப்பங்களை பெற்று அதில் தகுதியானவர்களின் விண்ணப்பங்களை தொகுத்து அனுப்புமாறு சென்னை தமிழ் வளர்ச்சி இயக்குநரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, 2023ம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு கரூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்காக பாடுபடும் தமிழ் ஆர்வலர்களிடம் இருந்து விண்ணப்பங்களை இலவசமாக (https://tamilvalarchithurai.tn.gov.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பிப்பவர்கள் தன் விவரக் குறிப்புடன் இரண்டு நிழற்படம், அவர்கள் ஆற்றிய பணி ஆகிய விபரங்களுடன் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், கரூர் என்ற முகவரிக்கு அக்டோபர் 10ம்தேதிக்குள் அனுப்பப்பட வேண்டும்.இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தமிழ் வளர்ச்சிக்கு அரும்பாடுபடும் ஆர்வலர்களுக்கு தமிழ்ச்செம்மல் விருது appeared first on Dinakaran.