×

தமிழ்நாட்டை உருவாக்க உறுதி ஏற்போம்

பெரம்பலூர், ஜூலை 4: சர்வதேச நெகிழிப்பை இல்லாத தினத்தை முன்னிட்டு- எளம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மஞ்சப்பைகளை மாவட்ட கலெக்டர் கற்பகம் வழங்கினார். சர்வதேச நெகிழிப்பை இல்லாத தினத்தை முன்னிட்டு, எளம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில், மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் மூலம், மஞ்சப்பைகளை மாவட்ட கலெக்டர் கற்பகம் நேற்று (3ம்தேதி) வழங்கினார்.

தமிழ்நாடு அரசு நெகிழிப் பயன்பாட்டினை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பொது மக்களிடையே மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நெகிழி பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்தும், நெகிழிக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பொருட்களை பயன்படுத்துவதன் நன்மைகள் குறித்தும், மாசுக் கட்டுப் பாட்டு வாரியத்தின் சார்பில் பல்வேறு வகையிலான விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதில் தமிழக அரசின் சிறப்பு திட்டமான ”மீண்டும் மஞ்சப்பை” இயக்கம் முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக கருதப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் நேற்று எளம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மாவட்டக் கலெக்டர் மஞ்சப்பைகளை வழங்கிப் பேசியதாவது :
நெகிழியை பயன் படுத்துவதால் சுற்றுச் சூழல் பாதிப்படைகின்றது. நம்மையும், நம் சுற்றுச் சூழலையும் பாதுகாக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றது. மாணவர்களாகிய நீங்கள் உங்கள் பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்களிடம் இது குறித்து எடுத்துரைக்க வேண்டும். கடைக்கு பொருட்கள் வாங்க செல்லும்போதோ, பிற பயன் பாடுகளுக்காகவோ பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து, துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என எடுத்துச்சொல்ல வேண்டும். நீங்களும் அதை கடைபிடிக்க வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாடில்லா தமிழ் நாட்டை உருவாக்க நம்மால் இயன்ற பங்களிப்பை வழங்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

முன்னதாக நெகிழி பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்ப்பது குறித்தும் சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்காத மாற்று பொருட்களின் பயன்பாடு குறித்தும் மாசுக்கட்டுப் பாட்டு துறையினரால் விரிவாக எடுத்துரைக்கப் பட்டது. இந்நிகழ்வில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் நெல்லைமதி, உதவி பொறியாளர் அர்ச்சனா பெஸ்டஸ், பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) அண்ணா துரை, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சுரேஷ்குமார், எளம்பலூர் அரசு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராணி, பெரம்பலூர் தாசில்தார் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post தமிழ்நாட்டை உருவாக்க உறுதி ஏற்போம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Perambalur ,International Day of Non-Violence- District ,Collector ,Karpagam ,Elambalur Government Higher Secondary School ,International Day of Non-Resilience ,Elambalur ,Government High School ,
× RELATED சுஹபுத்ரா நெல்லை மாநகராட்சி ஆணையராக...