×

தமிழக பட்ஜெட் தாக்கல்: உயர்கல்வியில் சேரும் அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000; புதிய வரிவிதிப்பு கட்டண உயர்வு இல்லை

சென்னை: அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்து மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 உதவி தொகை வழங்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐஐடி, எய்ம்ஸ் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களின் முழு கட்டண செலவை தமிழக அரசே ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு 37 ஆயிரம் கோடியும், காவல்துறைக்கு ரூ.10,285 கோடி நிதியையும் பட்ஜெட்டில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஒதுக்கியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் 2வது நிதி நிலை (பட்ஜெட்) அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று காலை 10 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் கூடியது. இதற்காக காலை 9.30 மணி முதலே அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்கு வர தொடங்கினர். தமிழக சட்டமன்ற வரலாற்றில் 2வது முறையாக இ-பட்ஜெட் (மின் நிதிநிலை அறிக்கை) தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்ததால், 234 சட்டமன்ற உறுப்பினர்களின் இருக்கைகளுக்கு முன் ஒரு கையடக்க தொடுதிரை (டேப்) வைக்கப்பட்டு இருந்தது. பேரவை கூட்டத்தில் பங்கேற்க 9.53 மணிக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் பேரவைக்குள் வந்தனர். சரியாக காலை 9.57 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவைக்கு வந்தார். அவருடன் நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும் வந்தார். அப்போது திமுக எம்எல்ஏக்கள் எழுந்து நின்று மேஜையை தட்டி வரவேற்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அனைத்துக்கட்சி எம்எல்ஏக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தார். பதிலுக்கு அனைவரும் முதல்வருக்கு வணக்கம் தெரிவித்தனர்.இதையடுத்து சபாநாயகர் மு.அப்பாவு 10 மணிக்கு அவைக்கு வந்ததும் திருக்குறள் படித்து பேரவை கூட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2022-2023ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை படிக்க தொடங்கினார். மொத்தம் 99 பக்கம் பட்ஜெட் உரையை அவர் நிகழ்த்தினார். அதில் 188 அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தது. நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:* 2014 முதல் வருவாய் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே வந்தது. முதன்முறையாக இந்த ஆண்டு இந்த நிலை மாற்றப்பட்டு ரூ.7 ஆயிரம் கோடிக்கும் மேல் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை குறைய உள்ளது. இந்த சவாலான ஆண்டிலும் நிதி பற்றாக்குறை 4.16  சதவீதத்தில் இருந்து 3.08 சதவீதம் ஆக குறைய வாய்ப்புள்ளது. இந்த அரசின் தீர்க்கமான நடவடிக்கைகளும் நிர்வாக திறனுமே இதனை சாத்தியமாக்கியுள்ளது.“இன்றைய சூழல்களை மட்டும் கருத்திற்கொள்ளாமல் தமிழ்நாட்டின் வருங்கால சந்ததியினரின் நலத்தையும் கருத்தில் கொண்டு தயாரிக்க வேண்டும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். அதை மனத்தில் கொண்டு இந்த வரவு-செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.ஐந்து மடங்கு அதிக வீரியத்துடன் கொரோனா 2ம் அலை பரவியிருந்த நேரத்தில் நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றோம். அத்தகைய இக்கட்டான சூழ்நிலையிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற முதல் நாளிலேயே ஐந்து தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றினார். அதனைத் தொடர்ந்து மீதமுள்ள தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற ஒரு தொலைநோக்கு திட்டத்தையும் வகுத்துள்ளார். அதனை அடிப்படையாகக் கொண்டு இந்த அரசு, வரலாறு காணாத வேகத்தில் தேர்தல் வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. இவை மட்டுமின்றி, கடந்த ஆண்டு நடைபெற்ற வரவு-செலவுத் திட்ட சட்டமன்றக் கூட்டத் தொடரில் பல முக்கியமான அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது.* உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையையும், முதலமைச்சரின் தனிப் பிரிவையும் இணைத்து “முதல்வரின் முகவரி” என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. இத்துறையின் கீழ் இதுவரை, 10,01,883  மனுக்களுக்கு உரிய தீர்வு காணப்பட்டுள்ளது. *  ரூ.5 கோடி செலவில் பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு, 21 இந்திய, உலக மொழிகளில் அச்சு மற்றும்  மின்னூல் பதிப்புகளாகவும் வெளியிடப்படும். *  தமிழ்வழிக் கல்வியை ஊக்குவிக்கும் வண்ணம், அரசு நிதியுதவியின்றிச் செயல்பட்டு வரும், தமிழ்வழியில் மட்டும் பாடங்களைக் கற்பிக்கும் பள்ளிகளில் இலவசமாக 1 முதல் 10ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு, இந்த ஆண்டு முதல் ரூ.15 கோடி மதிப்பீட்டில் இலவச நோட்டு, புத்தகங்கள் வழங்கப்படும்.*  சென்னை பெருநகரப் பகுதியில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க அமைத்த ஆலோசனைக் குழு வழங்கிய பரிந்துரைகளின்படி, வெள்ளத்தடுப்புப் பணிகள் முதற்கட்டமாக ரூ.1,000 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் என முதல்வர் அறிவித்தார். இப்பணிகளுக்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.* பயிர்க்கடன் தள்ளுபடிக்காக ரூ.2,531 கோடியும், நகைக்கடன் தள்ளுபடிக்காக ரூ.1,000 கோடியும், சுய உதவிக்குழுக்களின் கடன்கள் தள்ளுபடிக்காக ரூ.600 கோடியும் என இம்மதிப்பீட்டில் மொத்தம் ரூ.4,131 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.*  புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட 6 மாவட்டங்களில், ரூ.36 கோடி மதிப்பீட்டில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் உயர்தர வசதிகளுடன்கூடிய மாவட்ட மத்திய நூலகங்கள்  அரசால் ஏற்படுத்தப்படும். இந்நூலகக் கட்டிடங்களுக்கு தமிழ் அறிஞர்களின் பெயர்கள் சூட்டப்படும்.* இந்திய தொழில்நுட்ப கழகங்கள்(ஐஐடி), இந்திய அறிவியல் கழகம், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகங்கள்(எய்ம்ஸ்) போன்ற புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர, அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், இந்நிறுவனங்களில் இளநிலைப் பட்டப்படிப்பு பயில்வதற்கான முழுச் செலவையும் மாநில அரசே ஏற்கும். 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளிகளில் பயின்றுள்ள மாணவர்கள் இந்த உதவியைப் பெறலாம். * தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கை மிகக் குறைவாக இருப்பதைக் கருத்தில்கொண்டு, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றியமைக்கப்படுகிறது. இதன் மூலம், அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை, மாதம் ரூ.1,000 வங்கிக் கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும். இந்த மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும், இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம். இத்திட்டத்தின் மூலம், சுமார் 6 லட்சம் மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் பயன்பெற வாய்ப்புள்ளது. இந்தப் புதிய முன்முயற்சிக்காக, பட்ஜெட்டில் ரூ.698 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு வறிய நிலையில் உள்ள விதவையரின் மகள்களின் திருமண நிதியுதவித் திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம், அன்னை தெரசா அம்மையார் நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதியுதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம் ஆகிய திட்டங்கள் எவ்வித மாற்றமுமின்றி தொடர்ந்து செயல்படுத்தப்படும். * கலைஞரால் அமைக்கப்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுரங்கள், கடந்த பத்தாண்டுகளாக பராமரிப்பு இன்றி புறக்கணிக்கப்பட்டது. அதில், 149 சமத்துவபுரங்கள் ரூ.190 கோடி செலவில் சீரமைக்கப்படும்.* புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட தாம்பரம், காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர், சிவகாசி ஆகிய ஆறு மாநகராட்சிகளில் அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு, தலா ரூ.10கோடி என மொத்தம் ரூ.60 கோடி சிறப்பு நிதியாக வழங்கப்படும். மேலும் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 28 நகராட்சிகளுக்கு தலா ரூ.2 கோடி என மொத்தம் ரூ.56 கோடி சிறப்பு நிதியாக வழங்கப்படும். * மதுரவாயல்-சென்னை துறைமுகம் உயர்மட்டச் சாலை திட்டம் ரூ.5,770 கோடி மதிப்பீட்டில் 20.6 கிலோ மீட்டர் நீளமுள்ள இரட்டை அடுக்கு உயர்மட்டச் சாலையாக அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்த, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், தமிழ்நாடு அரசு, கடற்படை மற்றும் சென்னை துறைமுகம் ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது.* 2026ம் ஆண்டிற்குள், வெள்ள காலத்தில் மக்களை பாதிக்கக்கூடிய தரைப்பாலங்களை உயர்மட்டப் பாலங்களாக மாற்ற திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், வரும் ஆண்டில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் புதிய உயர்மட்டப்  பாலங்கள் அமைக்கப்படும்.* ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்கோயில்களை அவற்றின் பழமை மாறாமல் புதுப்பித்து, புனரமைக்க ரூ.100 கோடி செலவிடப்படும்.* மகளிரின் முன்னேற்றமே மாநிலத்தின் முன்னேற்றம் என்ற கொள்கையின் அடிப்படையில், அவர்களின் நலனுக்காக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளான ஆவின் பால் விலைக்குறைப்பு, சுய உதவிக் குழுக்களின் கடன் தள்ளுபடி, அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் போன்ற பல வாக்குறுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே நிறைவேற்றியுள்ளார். அடுத்த முக்கிய வாக்குறுதியான மகளிருக்கான உரிமைத்தொகை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். சென்ற ஆட்சியினர் விட்டுச் சென்ற நிதி நெருக்கடிச் சூழல் காரணமாக, இந்த வாக்குறுதியை இந்த அரசின் முதல் ஆண்டில் செயல்படுத்துவது கடினமாக இருந்து வருகிறது. இருப்பினும், இத்திட்டத்தின் கீழ் பயனடையத் தகுதியுள்ள பயனாளிகளை பல்வேறு தரவுகளின் அடிப்படையில் கண்டறிந்து, பயன்கள் அவர்களை சரியாகச் சென்றடையும் வகையில் திட்டத்தை வடிவமைப்பதற்கான பணிகள் முழு முனைப்புடன் நடைபெற்று வருகின்றன. அரசு எடுத்துவரும் பல்வேறு முயற்சிகளின் காரணமாக நிதிநிலையில் முன்னேற்றம் ஏற்படும் போது இத்திட்டம் செயல்படுத்தப்படும் என உறுதியளிக்கிறேன். இதைத் தவிர ஏராளமான அறிவிப்புகளை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ளார்.  பட்ஜெட்டில் புதிய வரி விதிப்பு, கட்டண உயர்வு ஏதுமில்லை என்பது குறிப்பிடதக்கது. சிறப்பு இருக்கை: அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கு அமைச்சர்களுக்கான இரண்டாவது இருக்கையில் அவருக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. பட்ெஜட் தாக்கல் செய்வதற்காக முன் வரிசையில் அவருக்கு சிறப்பு இருக்கை ஒதுக்கப்பட்டது. அதில் அவர் இருந்து பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அமைச்சர் தொடர்ச்சியாக 1.50 மணி நேரம் தனது பட்ஜெட் உரையை நிகழ்த்தினார். முதல்வருக்கு உற்சாக வரவேற்புமுதல்வர் மு.க.ஸ்டாலின் காலை 9.57 மணிக்கு சட்டப்பேரவைக்கு வந்தார். அவருக்கு அமைச்சர்கள், திமுக உறுப்பினர்கள், திமுக கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் எழுந்து நின்றும், மேஜையை தட்டியும் உற்சாகமாக வரவேற்பு தெரிவித்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்து விட்டு தனது இருக்கையில் அமர்ந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதி அமைச்சர் தாக்கல் செய்த பட்ெஜட்டை உன்னிப்பாக கவனித்துக்கொண்டு இருந்தார். சுமார் 2 மணி நேரம் அவர் தனது இருக்கையில் தொடர்ச்சியாக அமர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.புகழாரம் இல்லாத பட்ஜெட்தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அவ்வாறு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது, பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிதி அமைச்சர், இடைஇடையே தங்களது கட்சி தலைவர்கள், முன்னாள் முதல்வர்கள் என அனைவரையும் புகழ்ந்து பாடுவது வழக்கம். ஆனால், நேற்றைய பட்ஜெட்டில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் எந்தவித புகழ்பாடாமல் தனது பட்ெஜட் உரையை படித்து முடித்தார். புகழ்பாடாமல் பட்ஜெட் உரையை படித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது….

The post தமிழக பட்ஜெட் தாக்கல்: உயர்கல்வியில் சேரும் அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000; புதிய வரிவிதிப்பு கட்டண உயர்வு இல்லை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,
× RELATED தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக்...