×

தமிழக அரசு கொண்டுவந்த ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல்; உடனடியாக அமலுக்கு வந்தது

சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வதற்கான தமிழகஅரசின் சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். இது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் சட்டம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. எனவே, இனி ஆன்லைன் விளையாட்டை நடத்துவோர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக அரசிதழில் வெளியான அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில்  கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் விளையாட்டுகளில் பலர் அடிமையாகி பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனால் பல குடும்பங்கள் பொருளாதாரத்தில் பாதிப்படைந்து சிதைந்துவிட்டன. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் சர்வதேச நோய்களின் பகுப்பாய்வு என்ற ஆய்வில், இந்த ஆன்லைன் விளையாட்டு பழக்கம் என்பது எதிர்மறை எண்ணங்களையும், குடும்ப, சமூக, கல்வி, தொழில் மற்றும் முக்கிய துறைகளின் செயற்பாடுகளையும் பாதிப்பதாக இருக்கிறது என்று அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளது.இதை தொடர்ந்து, தமிழக அரசு ஆன் லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2020ம் ஆண்டில் தொடரப்பட்ட வழக்கில், நீதிபதிகள் வழங்கிய உத்தரவில் தமிழக அரசு ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதித்ததை ரத்து செய்தது. மேலும், இது தொடர்பாக புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று அரசுக்கு அறிவுறுத்தியது. அதன்பேரில்,  தமிழக அரசு, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது. ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பாக அரசுக்கு உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று அரசு தெரிவித்தது. ஆன்லைன் விளையாட்டில் என்ன பாதிப்பு ஏற்படுகிறது, எவ்வளவு பணம் செலவாகிறது, பொருளாதார வகையில் மக்கள் எப்படி பாதிக்கப்படுகின்றனர். மற்ற விளையாட்டுகளில் இருந்து இது எந்தவகையில் வேறுபடுகிறது என்பது உள்ளிட்ட பல்வேறு காரணிகள் குறித்து ஆலோசனைகள்  வழங்கியது. பொதுமக்களிடம் இருந்து கேட்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் 10735 மின்னஞ்சல் புகார்கள் வந்தன. அதில் ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று 10708 புகார்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் 2 லட்சம் ஆசிரியர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில், ஆன்லைன் விளையாட்டுகளால் 67 சதவீத மாணவர்களின் கண்பார்வையில் குறைபாடு ஏற்பட்டுள்ளது. அவர்களின் கவனம், திறமைகள் 75 சதவீதம் குறைந்துள்ளது. நடத்தையிலும் மாற்றம் ஏற்பட்டு கோபம் ஏற்படுகிறது என்பதும் தெரியவந்துள்ளது. இந்த விளையாட்டை உருவாக்கியவர்கள் இதன் பாதிப்புகள் குறித்த தகவல்களை மறைத்துள்ளனர். இந்த விளையாட்டில் ஈடுபடுவோருக்கு முற்றிலும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். இது, விளையாட்டு திறனை பாதித்து உடல் நிலையில் பாதிப்பு ஏற்படுத்துவதும், சமூக பொருளாதாரத்தில் பின்விளைவுகளை ஏற்படுத்துவதும் தெரியவந்துள்ளது. இந்த விளையாட்டால் பொது சுகாதாரம், சமூக ஒழுங்கு, சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. பல குடும்பங்களில் தற்கொலைகள் நடந்துள்ளன என்றும் குழு விரிவான அறிக்கை தாக்கல் செய்துள்ளது. பொதுமக்களிடம் கேட்கப்பட்ட கருத்துகேட்பு  குழுவின் அறிக்கை, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் எடுக்கப்பட்ட சர்வே அடிப்படையில்  ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய இந்த அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகள் தடுப்பு மற்றும் ஒழுங்குமுறை சட்டம் 2022 கொண்டு வரப்படுகிறது. இந்த சட்டத்துக்கு தமிழக கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். அதன் பேரில் இந்த சட்டம் உடனடியாக அமலுக்கு வருகிறது. ஆன்லைன் விளையாட்டை கண்காணிப்பது, வங்கிகளுக்கு தெரியாமல் பணப் பரிவர்த்தனை செய்வது ஆகியவை அடங்கும். மேலும், ஓய்வு பெற்ற தலைமைச் செயலாளர் தலைமையில் தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் அமைக்கப்படுகிறது. இந்த ஆணையத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் ஐஜி, தகவல் தொழில்நுட்ப நிபுணர், உளவியலாளர், ஆன்லைன் விளையாட்டு நிபுணர்கள் நியமிக்கப்படுகின்றனர். இந்த ஆணையம் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவதோடு, உள்ளூர் ஆன்லைன் விளையாட்டுகளை நடத்துவோருக்கு அனுமதி அளித்தல், அவர்களின் தகவல்களை திரட்டுவது, தவறு செய்யும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது, புகார்கள் வந்தால், அதற்கு தீர்வு காண்பது ஆகியவற்றை மேற்கொள்ளும். பணம் வைத்து எந்த ஆன்லைன் விளையாட்டும் நடத்தக் கூடாது. ஆன்லைன் தொடர்பாக பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் விளம்பரங்களோ தகவல்களோ பரிமாறி இந்த விளையாட்டுகளை ஊக்குவிக்கக் கூடாது. ஆன்லைன் விளையாட்டுகளுக்காக வங்கிகள், நிதி நிறுவனங்கள் பணப் பரிவர்த்தனைக்கு வழிகளை ஏற்படுத்தக் கூடாது. இவ்வாறு தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது….

The post தமிழக அரசு கொண்டுவந்த ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல்; உடனடியாக அமலுக்கு வந்தது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,CHENNAI ,Governor of Tamil Nadu ,Tamil Nadu ,
× RELATED மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரம்: வலியுறுத்தும் தமிழ்நாடு அரசு