×

தமிழகத்தில் ஜன.25 வரை சேவல் சண்டை நடத்த தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: தமிழகத்தில் ஜன.25ம் தேதி வரை சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கக்கூடாது என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. கரூர் மாவட்டம், தாந்தோணி அருகே காளியப்பனூரைச் சேர்ந்தவர் பிரேம்நாத். பாமக மேற்கு மாவட்ட செயலாளரான இவர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா பூலாம்வலசு கிராமத்தில் கடந்த 20 வருடங்களாக சேவல் சண்டை போட்டிகள் நடத்தப்படுகிறது. சேவல்களின் கால்களில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை கட்டமாட்டோம் என உத்தரவாதம் அளித்து அனுமதியை ெபறுகின்றனர். ஆனால், உத்தரவாதத்தை மீறி சேவல்களின் கால்களில் கத்தியை கட்டி போட்டிகளை நடத்துகின்றனர். கடந்தாண்டு ஒருவர் மர்மமான முறையில் இறந்தார். எனவே, பூலாம்வலசு கிராமத்தில் சேவல் சண்டை நடத்த அனுமதிக்க கூடாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஜி.ஜெயச்சந்திரன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சேவல் சண்டை நடத்தக்கூடாது என ஏற்கனவே உத்தரவு உள்ளதே? தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் சேவல் சண்டைக்கு எப்படி அனுமதி வழங்கப்படுகிறது? இதுகுறித்து, அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறி, விசாரணையை ஜன.25க்கு தள்ளி வைத்தனர். அதுவரை சேவல் சண்டைக்கு அனுமதி வழங்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளனர்….

The post தமிழகத்தில் ஜன.25 வரை சேவல் சண்டை நடத்த தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags :
× RELATED அதிமுக ஆலோசனை கூட்டத்துக்கு ஆளை...