×

தமிழகத்தில் எந்த சூழலிலும் ஏற்படாத வகையில் மத மோதல்களை இரும்பு கரம் கொண்டு அடக்குவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தமிழகத்தில் எத்தனை சக்திகள் முயன்றாலும்  சாதி மத மோதல் இன்றி –  சமூக நல்லிணக்க தோட்டமாக மாநிலம் திகழ்ந்து கொண்டு  இருக்கிறது. மத  மோதல்களை ஏற்படுத்துவோர் யாராக இருந்தாலும் கடும்  நடவடிக்கை எடுக்கப்பட்டு  வருகிறது. இனிமேலும் இரும்புக் கரம் கொண்டு  அடக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழக  சட்டப்பேரவையில் நேற்று காவல் மற்றும் தீயணைப்பு துறை மானிய கோரிக்கை  மீதான விவாதத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசியதாவது: தமிழகத்தில் இந்த  ஓராண்டில் குற்றங்கள் நடைபெறவிடாமல் அரசு  தடுத்திருக்கிறது. திருவிழாக்களில் மக்களின் பாதுகாப்பினை உறுதி  செய்திருக்கிறது. காவல்துறைக்கும் – மக்களுக்கும் ஒரு நல்லுறவை ஏற்படுத்தி,  தமிழ்நாடு காவல்துறை மீது மக்களுக்கு இப்போது மிகப்பெரிய நம்பிக்கை  வந்திருக்கிறது.  கூலிப்படையினர் எங்கோ ஓடி மறைந்தனர், ஒழிந்தனர் என்ற அளவிற்கு மாநிலத்தை  விட்டு விரட்டப்பட்டுள்ளார்கள். சட்டத்தின் ஆட்சி  நிலைநிறுத்தப்பட்டு,  எவ்வித பாரபட்சமின்றி காவல்துறை நடவடிக்கை எடுத்து  வருகிறது. எவ்வித  அரசியல் குறுக்கீடுகளும் இல்லாமல் காவல்துறை  சுதந்திரமாகச் செயல்பட்டுக்  கொண்டிருக்கிறது. சட்டத்தின் முன் அனைவரும்  சமம் என்ற கோட்பாடு  நிலைநாட்டப்பட்டுள்ளது. எத்தனை சக்திகள் முயன்றாலும்  சாதி மத மோதல் இன்றி –  சமூக நல்லிணக்க தோட்டமாக தமிழ்நாடு திகழ்ந்து கொண்டு  இருக்கிறது. மத  மோதல்களை ஏற்படுத்துவோர் யாராக இருந்தாலும் கடும்  நடவடிக்கை எடுக்கப்பட்டு  வருகிறது. இனிமேலும் இரும்புக் கரம் கொண்டு  அடக்கப்படும்.மத  துவேஷங்களுக்கு தமிழ் மண்ணில் இடமளிக்க முடியாது.  அப்படி முயலுவோர்  சட்டத்தின் தண்டனையை நிச்சயம் அனுபவிக்கக்கூடிய சூழலை  இந்த அரசு நிச்சயம்  உருவாக்கும். வலைத்தள யுகத்தின் ஆபத்துகளை அறிந்து  இந்த அரசு அவற்றை  தடுக்க கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதுவும்  தொடரும். நான்  வெளியூர் பயணங்களுக்கு செல்லும்போது காவல் நிலையங்களிலும்  தீயணைப்பு  நிலையங்களிலும் திடீர் ஆய்வு நடத்துவதை வழக்கமாக  வைத்திருக்கிறேன். அப்படி  ஆய்வு நடத்தும்போது மக்களுக்கான சேவைகள் என்ன  என்பது குறித்தும்,  காவலர்களுக்கான தேவைகள் குறித்தும் நான் கேட்டறிந்து  அதற்கான  நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுகிறேன். இந்த அரசை பொறுத்தவரை  மக்களின்  நலனை காவல்துறையினர் பாதுகாக்கிறார்கள். ஆகவே, காவலர்களின் நலனை  இந்த அரசு  பாதுகாக்கும். விரைவில் புதிய காவலர் ஆணையத்தின் பரிந்துரைகள்   கிடைக்கும். அப்படி கிடைத்ததற்கு பிறகு, அதன்மூலம் காவல்துறையினருக்கு பல   நன்மைகளும் கிடைக்கும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.புதிய முதலீடுகள் தமிழகத்தை நோக்கி வருகிறது; தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியாக இருப்பதால்தான், வெளிமாநிலங்களுக்கு சென்ற தொழிற்சாலைகள் தமிழ்நாட்டிற்கு மீண்டும் திரும்பி வந்து கொண்டிருக்கின்றன. புதிய முதலீடுகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன.இந்தியாவிலேயே அமைதியான மாநிலம் தமிழ்நாடு, பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்ற நற்பெயர் மீண்டும் ஏற்பட்டிருக்கிறது. குற்றங்கள் குறைய வேண்டும் என்பதைவிட குற்றமே நடைபெறாத சூழலை உருவாக்கும் துறையாக அது மாற வேண்டும். கொலை, திருட்டு, பாலியல் தொந்தரவு, போதை மருந்துகள், வன்முறை சம்பவங்கள் ஆகியவைதான் மிகப்பெரிய குற்றங்கள். இவை எந்த சூழலிலும் நடைபெறாத நிலையை உருவாக்குவதற்கு காவல் துறை திட்டமிட வேண்டும். எந்தச் சூழலிலும் பொதுமக்களுக்கு அச்சம் தரும் சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அரசியல்ரீதியாகவோ, மதம் மற்றும் சாதி காரணமாகவோ வன்முறைகள் உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி திட்டமிட்டு இந்த அரசாங்கத்துக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் மோதல்கள் உருவாக்க நினைப்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.இரவு ரோந்து செல்லும் காவலர்களுக்கு ₹300 சிறப்பு படி எஸ்ஐ, எஸ்எஸ்ஐக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை விடுப்பு: சட்டப்பேரவையில் நேற்று காவல்துறை, தீயணைப்புதுறை மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக்கோரிக்கை மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு: அறிவிப்புகள் அடங்கியுள்ள “அறிவிப்பு புத்தகம்” அச்சிடப்பட்ட பிறகு எனது அலுவலகத்தில் சந்தித்த சில காவலர்கள், காவல்துறை அதிகாரிகள் சில கோரிக்கைகளை என்னிடத்தில் எடுத்து வைத்தார்கள். அதை மனதில் வைத்து, அதிகாரிகளோடு நான் கலந்து பேசி இந்த அவையில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு புத்தகத்தில் உள்ளவற்றையும் தாண்டி மூன்று புதிய அறிவிப்புகளை இப்போது நான் வெளியிட விரும்புகிறேன். * இரவுப் பணிக்குச் செல்லும் பணியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக இரவு ரோந்துப் பணிக்கு செல்லும் அனைத்து காவல் ஆளிநர்கள் மற்றும் காவல் ஆய்வாளர் வரையிலான அதிகாரிகளுக்கு சிறப்புப் படியாக மாதம் 300 ரூபாய் வழங்கப்படும்.  * ஏற்கனவே காவல் ஆளிநர்களுக்கு வார விடுமுறை அளிக்கும் நடைமுறை பின்பற்றப்படுவதை தொடர்ந்து தற்போது 15 நாட்களுக்கு ஒரு முறை உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு ஒரு நாள் விடுப்பு வழங்கப்படும். இதனால் 10 ஆயிரத்து 508 பேர் பயனடைவார்கள்.* இணையவழி சூதாட்டத்தில் ஈடுபட்டு பலரும் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வதற்கான காரணங்களை அறியும் பொருட்டு மாநில குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறையின் கண்காணிப்பாளர் (எஸ்.பி) தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்று அமைக்கப்படும்.விரைவில் 3 ஆயிரம் புதிய காவலர்கள் தேர்வு: தமிழக சட்டப்பேரவையில் நேற்று காவல் மற்றும் தீயணைப்பு துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சாலை பாதுகாப்பில் இந்த அரசு மிக முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. “நம்மைக் காக்கும் 48” என்ற திட்டம் – உயிர்காக்கும் திட்டம். அந்த திட்டத்தின் மூலமாக சாலை விபத்துகளை குறைக்க காவல்துறையின் சார்பில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் விளைவாக, விபத்து மரணங்கள் இந்த ஆட்சியில் குறைந்துள்ளது. அதிமுக ஆட்சியில்  மரணத்தை ஏற்படுத்தும் விபத்துகள் 15,290ஆக இருந்துள்ளது. தற்போது அது  14,203ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் 15,967ஆக இருந்த விபத்து மரணங்கள், தற்போது 14,845 ஆக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த நிதிநிலை அறிக்கையின்போது காவல்துறைக்கு அறிவிக்கப்பட்ட 44 அறிவுப்புகளில் 39க்கு அரசாணை  வெளியிடப்பட்டு விட்டது. நான் துவக்கத்திலேயே சொன்னதுபோல் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் காவலர்களுக்கு  நலத்திட்டங்கள் உருவாக்க புதிய காவல் ஆணையம் அமைக்கப்பட்டது.இரண்டாம்நிலை காவலர்கள், தீயணைப்பு காவலர்கள், சிறை காவலர்கள் உள்ளிட்ட பணிகளுக்கு 11,150 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. காவலர்கள் தங்கள்  உடல்நலனை பேணி காத்திடவும், தங்கள் குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடவும் இரண்டாம்நிலை காவலர் முதல் தலைமை காவலர்கள் வரையிலான ஆளிநர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படும் என்ற அறிவிப்பு  வெளியிடப்பட்டு அது அரசாணையாக்கப்பட்டு, கடந்த 6 மாதங்களில் 63 ஆயிரத்து 77 பேர் வார ஓய்வினை பெற்று பயன் அடைந்துள்ளார்கள்.சென்னை பெருநகர ஆயுதப்படை காவல் ஆளிநர்களின் நலன் கருதி சென்னை பெருநகர காவலில் செயல்படும் CLAPP செயலி மூலம், இதுவரை 2,566 காவல் ஆளிநர்கள் தற்செயல் விடுப்பும், 2,188 காவல் ஆளிநர்கள் வாராந்திர விடுப்பும், 494 காவல் ஆளிநர்கள் மருத்துவ விடுப்பும், 252 காவல் ஆளிநர்கள் ஈட்டிய விடுப்பும் என மொத்தம் 5,590 காவல் ஆளிநர்கள் இச்செயலி மூலம் விடுப்பு பெற்று  பயன்பெற்றுள்ளார்கள்.இவ்வாறு அவர் கூறினார்….

The post தமிழகத்தில் எந்த சூழலிலும் ஏற்படாத வகையில் மத மோதல்களை இரும்பு கரம் கொண்டு அடக்குவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,
× RELATED தந்தையர் தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து