×

தனியார் நிறுவனத்தில் இருந்து வாடிக்கையாளர் தகவல்களை திருடி பல லட்சத்திற்கு விற்ற பெண் கைது: போலீசார் நடவடிக்கை

அம்பத்தூர், நவ.19: அம்பத்தூர் அருகே தனியார் நிறுவனத்தில் இருந்து, வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடி விற்று, அதன்மூலம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். பிரபல வங்கிகள், தொலைதொடர்பு நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகளில் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் திருடப்பட்டு, பல லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அதன்படி சென்னையில் ஒரு சம்பவம் சமீபத்தில் நடைபெற்றது. திருவல்லிக்கேணியில் உள்ள பிரபல தனியார் மென்பொருள் நிறுவனத்தின் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. அதில், எங்கள் நிறுவனம் அமேசான் வெப் சர்வீஸ் மூலம் புதிய மென்பொருட்களை வங்கி நிறுவனங்களுக்கு தயாரித்து கொடுக்கும் பணியை செய்து வருகிறது.

நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் அக்கவுண்டுகள் மோசடியான முறையில் ஹேக்கிங் செய்யப்பட்டது. இதுகுறித்து நிறுவனத்திற்கு புகார்கள் வந்தன. எனவே எங்கள் மென்பொருட்களை ஹேக் செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், மோசடி செய்த நபரின் ஐபி முகவரியை ஆய்வு செய்த போது, புகார் அளித்த மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்த எடிசன் (29) என தெரியவந்தது. சென்னை நீலாங்கரை கசூரா டைமண்ட்ஸ் பகுதியை சேர்ந்த எடிசனை பிடித்து விசாரணை நடத்திய போது, தன்னுடன் பணியாற்றிய நீலாங்கரையை சேர்ந்த ராம்குமார் (29), ஆதம்பாக்கம் சுரேந்திர நகரை சேர்ந்த காவ்யா வசந்த கிருண்ஷன் (29), பெங்களூரு வடக்கு பெல்லாரி சாலையை சேர்ந்த ரவிதா தேவசேனாபதி (40), புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பகுதியை சேர்ந்த கருப்பையா (26) ஆகியோர் தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்ட டேட்டாக்களை திருடி, அதை ஹேக் செய்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து மோசடிக்கு பயன்படுத்திய 7 லேப்டாப், 1 ஐபேட், 4 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள், சென்னையில் மற்றொரு சம்பவம் நடந்து, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கொரட்டூரை சேர்ந்த பிரவலிக்கா என்பவர், கொரட்டூர் பெரியார் நகரில், தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தில் டெலி காலிங் பணிக்காக, கொரட்டூர் பகுதியை சேர்ந்த குணசுந்தரி (49), என்பவரை நியமித்துள்ளார். இவர், இந்த நிறுவனத்திலிருந்து வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடி, கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் கடன் நிறுவனத்திற்கு விற்றுள்ளார். அதன்மூலம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார். இதுபற்றி அறிந்த பிரவல்லிகா, என்.சி.ஆர்.பி மற்றும் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த ஆவடி சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, குணசுந்தரியை நேற்று கைது செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post தனியார் நிறுவனத்தில் இருந்து வாடிக்கையாளர் தகவல்களை திருடி பல லட்சத்திற்கு விற்ற பெண் கைது: போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Ambattur ,
× RELATED அம்பத்தூர் மண்டலத்தில் சாலையில் திரியும் மாடு, தெரு நாய்களால் விபத்து