×

தடுப்பூசி செலுத்திக்கொள்ள பெருகும் ஆர்வம்!: ஈரோட்டில் வரிசையில் காத்திருக்க இரவில் குவிந்த மக்கள்…கற்களை வைத்து இடம் பிடிப்பு..!!

ஈரோடு: தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் ஈரோட்டில் இன்று போடப்படும் ஊசிக்காக நேற்று இரவே திரண்டு வரிசைகட்டி நின்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் நீண்ட நாட்களுக்கு பிறகு ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இருந்தபோதிலும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். 
ஒவ்வொரு மையத்திலும் முதலில் வரும் நூறு பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது. ஈரோடு வீரப்பச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இன்று போடப்படும் தடுப்பூசிக்காக நேற்று இரவு 8 மணிக்கே பொதுமக்கள் வரிசைகட்டி நிற்கின்றனர். மேலும் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காக கற்களை வைத்து அவர்கள் இடம் பிடித்துள்ளனர். 
ஈரோடு மாவட்டத்திற்கு கூடுதலாக தடுப்பூசி ஒதுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆதிவாசி மக்கள் தயக்கம் காட்டுவதால் சுகாதாரத்துறை தொண்டு நிறுவனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 
கூடலூரை அடுத்த புளியம்பாறை பகுதியில் உள்ள ஆதிவாசி கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு கடந்த 2 நாட்களாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுத்து குடியிருப்பு பகுதியில் ஓடி ஒளியும் ஆதிவாசி பகுதி மக்களை நெருங்கி பழகும் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 
ஆதிவாசி பழங்குடியின மக்களுக்கு முன்னுரிமை அளித்து இதுவரை 7 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழ்நாட்டிற்கு நேற்று நான்கரை லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. இதனை மாவட்டம் வாரியாக பிரித்து அனுப்பும் பணியில் சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது. 

The post தடுப்பூசி செலுத்திக்கொள்ள பெருகும் ஆர்வம்!: ஈரோட்டில் வரிசையில் காத்திருக்க இரவில் குவிந்த மக்கள்…கற்களை வைத்து இடம் பிடிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Erode ,Tamilnadu ,
× RELATED கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல்...