×
Saravana Stores

டோக்கியோ பாரா ஒலிம்பிக் இன்று கோலாகல தொடக்கம்: மாரியப்பன் தலைமையில் இந்தியா

டோக்கியோ: ஒலிம்பிக் போட்டிகளை தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் இன்று தொடங்குகிறது. இந்த தொடரில் இந்தியா சார்பில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு தலையில் 54 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். கொரோனா பீதி காரணமாக கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய ஒலிம்பிக்  போட்டி ஒத்திவைக்கப்பட்டு, இந்த ஆண்டு  ஜூலை 23ம் தேதி முதல் ஆக.8ம் தேதி வரை டோக்கியோவில் நடந்தது. அதில் இந்தியா ஒரு தங்கம் உட்பட 7 பதக்கங்களை கைப்பற்றி புதிய சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகளுக்கான  பாரா ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் இன்று தொடங்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பூட்டிய அரங்கில்  தொடக்கவிழா நடைபெறும். அணிவகுப்பில் பங்கேற்கும் இந்தியக் குழுவினருக்கு, தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு தேசியக் கொடி ஏந்தி  தலைமையேற்க உள்ளார். இந்தப்போட்டி செப். 5ம் தேதியுடன் நிறைவு பெறும். முதல் நாளான இன்று தொடக்கவிழா மட்டும் நடைபெறும். போட்டிகள் நாளை முதல் நடக்கும். சுமார் 163 நாடுகளைச் சேர்ந்த 1893 வீராங்கனைகள் உட்பட  மொத்தம் 4,511 பேர் பங்கேற்கின்றனர். இவர்கள் வில்வித்தை,  தடகளம், நீச்சல், படகு போட்டி, கால்பந்து, குதிரையேற்றம், துப்பாக்கிசுடுதல், டென்னிஸ், ஜூடோ என 23 வகையான விளையாட்டுகளில் திறமையை வெளிப்படுத்த உள்ளனர்.  இந்தியா சார்பில் 14 வீராங்கனைகள் உள்பட 54 பேர் களமிறங்குகின்றனர். இவர்கள் வில்வித்தை, தடகளம், பேட்மின்டன், படகுபோட்டி, வலு தூக்குதல்,  துப்பாக்கிச் சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், டேக்வாண்டோ என 9 வகையான போட்டிகளில் பங்கேற்கின்றனர்.  தடகளத்தில்   அதிகபட்சமாக 24 பேர் கலந்துகொள்கின்றனர்.இந்தியா இதுவரை…* 1964, இஸ்ரேல்  பாரா ஒலிம்பிக் போட்டியில் தான் இந்தியா முதல்முறையாக பங்கேற்றது. 1976, 1980ல் மட்டும் பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவில்லை.* 1972, ஜெர்மனி போட்டியில்  முதல் பதக்கமே தங்கமாக  வென்று,  நீச்சல் வீரர் முரளிகாந்த் பட்கர் மூலமாக பதக்கக் கணக்கை இந்தியா தொடங்கியது. அதன்பிறகு 2016 வரை  தலா  4 தங்கம், வெள்ளி, வெண்கலம் என மொத்தம் 12 பதக்கங்களை இந்தியா வசப்படுத்தியுள்ளது.* 2016ல் பிரேசிலில் நடந்த  ரியோ பாரா ஒலிம்பிக்சில்  தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு (உயரம் தாண்டுதல்),  தேவேந்திரா ஜஜாரியா (ஈட்டி எறிதல்) தங்கம்  வென்றனர். இந்த முறையும் டோக்கியோ சென்றுள்ள தேவேந்திரா, 2004ல் ஏதென்ஸ் பாரா ஒலிம்பிக்சிலும் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.டோக்கியோவில்…* இந்தியா பங்கேற்கும் முதல் போட்டி ஆக.27ல் நடக்க உள்ளது. அன்று வில்வித்தை தனிநபர் பிரிவு தகுதிச் சுற்றில் ஹர்விந்தர் சிங், விவேக் சிகாரா பங்கேற்க உள்ளனர்.* தமிழக வீரர் மாரியப்பன்  பங்கேற்கும் உயரம் தாண்டுதல் ஆக.31ல் நடைபெறும். கடைசி நாளான செப்.5ல் கலப்பு 50 மீட்டர் ரைபிள் துப்பாக்கிச்சுடுதல்  போட்டியில்  இந்தியா பங்கேற்கிறது….

The post டோக்கியோ பாரா ஒலிம்பிக் இன்று கோலாகல தொடக்கம்: மாரியப்பன் தலைமையில் இந்தியா appeared first on Dinakaran.

Tags : Tokyo Para Olympics ,India ,Mariappan ,Tokyo ,Para Olympic ,Olympic Tournament ,Dinakaran ,
× RELATED பழங்குடியினரின் வாழ்க்கையை வரையறுக்கும் தீபாவளி!