×

டெல்டா விவசாய சங்க தலைவர்கள் எச்சரிக்கை உரம் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெறாவிட்டால் போராட்டம்

திருச்சி: டெல்டா மாவட்டத்தில் முன்பட்ட குறுவை சாகுபடி துவங்கியுள்ளது. விதைப்பு முடிந்தவுடன் விவசாயிகள் பயிர்களுக்கு உரமிடுவர். தற்போது உரம் தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள் விலை உயர்ந்ததாக கூறி உரம் விலையை 60 சதவீதம் வரை உர நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. இதற்கு டெல்டா மாவட்ட விவசாய சங்க தலைவர்கள் கடும் கண்டம் தெரிவித்ததுடன், உர விலையை குறைக்க வலியுறுத்தி உள்ளனர். தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன்: மத்திய மோடி அரசு, தொடர்ந்து விவசாயிகளுக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கான இடு பொருட்களின் விலையை உற்பத்தி நிறுவனங்களே நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்று அனுமதி வழங்கி ஆண்டுதோறும் டிஏபி, காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட உரங்களின் விலையை பல மடங்கு உயர்த்தி வருகிறார்கள். இதனை வண்மையாக கண்டிக்கிறோம். இதுகுறித்து மத்திய அரசு உண்மை நிலையை தெளிவுபடுத்த வேண்டும். விலை உயர்வை கைவிட்டு விவசாயிகளுக்கு குறைவான விலையில் தட்டுப்பாடின்றி உரங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். உர விலை உயர்வை திரும்ப பெறாவிட்டால், போராட்டம் நடத்தப்படும். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு: விவசாயிகளுக்கு லாபகரமான விலை தருவதாக கூறிவிட்டு அதிகப்படியான விலைக்கு உரம் விற்கின்றனர். அதிக விலைக்கு உரம் விற்றால் விவசாயிகள் வாங்கமுடியாமல் விவசாயத்தை கைவிட்டுவிடுவார்கள். அதன் பின்னர் கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் மரபணு மாற்றப்பட்ட விதை அளித்து விவசாயம் செய்வார்கள். உரம் விலையை குறைக்ககோரி போராட்டம் நடத்த உள்ளோம். விலை உயர்வை குறைக்கும் வரை தினம் 25 விவசாயிகள் திரண்டு பாம்பு, எலி கறி சாப்பிட்டு தொடர் போராட்டம் நடத்தப்படும். காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட துணை செயலாளர் சுகுமாரன்: உரம் விலை உயர்வை திரும்ப பெறாவிட்டால், விவசாயிகள், பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்….

The post டெல்டா விவசாய சங்க தலைவர்கள் எச்சரிக்கை உரம் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெறாவிட்டால் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Delta agricultural union ,federal government ,Trichy ,Delta district ,Delta Agricultural Association ,central government ,Dinakaraan ,
× RELATED திருச்சியில் பள்ளி, கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்