×

டிரான்ஸ்பார்மரை மாற்றித்தராத அதிகாரிகளை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்: செய்யூர் அருகே பரபரப்பு

செய்யூர், ஜூன் 20: செய்யூர் அருகே, பழுதான டிரான்ஸ்பார்மரை மாற்றித்தராத மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து கிராம பெண்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இ்ச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்துள்ள ஜமீன் புதூர் கிராமத்தில், குடியிருப்புவாசிகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு அதே பகுதியில் அமைக்கப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்து மின் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. பழமையான இந்த டிரான்ஸ்பார்மர் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த காற்று மழையின் போது பழுதானது. இதனை மின்வாரிய துறையினர் உடனடியாக சீர் செய்யவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் அளித்ததை தொடர்ந்து மாற்று டிரான்ஸ்பார்மரில் இருந்து குடியிருப்புகளுக்கு மட்டும் மின் இணைப்பு வழங்கியுள்ளனர்.

ஆனால், குடிநீர் விநியோகம் செய்யப்படும் மின் மோட்டாருக்கும், விவசாய நிலங்களுக்கு மட்டும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், கடந்த ஒரு வாரமாக அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்ததோடு, மறுபுறம் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் நீரின்றி கருகி வந்துள்ளது. இதனால், அதிருப்தியடைந்த அப்பகுதி பெண்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் நேற்று செய்யூர்-சித்தாமூர் செல்லும் நெடுஞ்சாலை நல்லூர் கூட்ரோடு பகுதியில் காலி குடங்களுடன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த செய்யூர் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்து புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து அனுப்பி வைத்தனர். இதனால், அப்பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post டிரான்ஸ்பார்மரை மாற்றித்தராத அதிகாரிகளை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்: செய்யூர் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Seyyur ,Chengalpattu district ,Zameen… ,Women ,Dinakaran ,
× RELATED வடகிழக்கு பருவமழை காரணமாக...