குடியாத்தம், மே 29: குடியாத்தத்தில் ஆதார் கார்டில் முகவரி மாற்றம் செய்ய டாக்டரின் போலி கையெழுத்து மற்றும் சீலுடன் வழங்கப்பட்ட சான்றிதழ் கண்டறியப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா அலுவலக வளாகத்தில் இ- சேவை மையம் உள்ளது. இதில், ஆதார் சேவை மையமும் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆதார் கார்டில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம், பிறந்த தேதி திருத்தம், புகைப்படம் மற்றும் கைரேகை பதிவு, புதிய கார்டு விண்ணப்பம் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வழக்கமாக ஆதார் கார்டில் விவரங்களை மாற்றுவதற்கு, அதற்காக விண்ணப்பம் செய்யும் நபரின் உண்மை தன்மை குறித்து அரசின் ஏ கிரேட் அல்லது பி கிரேட் அலுவலர் சான்று அளிக்க வேண்டும். அதன்படி, நேற்று ஒருவர் ஆதார் கார்டில் முகவரி மாற்ற செய்ய இ- சேவை மையத்திற்கு வந்துள்ளார். அப்போது, அங்குள்ள பத்திர எழுத்தர் ஒருவர் அவரிடம் ₹500ஐ பெற்றுக்கொண்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் எலும்பு முறிவு டாக்டரின் போலியான சீல் மற்றும் கையெழுத்து போட்டு சான்று அளித்துள்ளார்.
இதனை எடுத்துக் கொண்டு அந்த நபர் சேவை மையத்திற்கு சென்றுள்ளார். பின்னர், ஆதார் புகைப்படம் எடுக்கும்போது இது போலி என்பதை கம்ப்யூட்டர் ஆபரேட்டர் கண்டுபிடித்து, குடியாத்தம் தாலுகா அலுவலகத்திற்கு புகார் தெரிவித்தார். இதையடுத்து வருவாய்த்துறை அலுவலர்கள், சம்பந்தப்பட்ட டாக்டரை தொடர்பு கொண்டு கேட்டபோது, இதுதொடர்பாக எந்தவித சான்றும் தான் அளிக்கவில்லை என தெரிவித்துள்ளார். எனவே, ஆதார் கார்டில் முகவரி மாற்றம் செய்வதற்காக விண்ணப்பிக்க வந்த நபர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். தொடர்ந்து, இதுகுறித்து குடியாத்தம் தாசில்தார் சித்ராதேவி, தேர்தல் பிரிவு துணை தாசில்தார் வடிவேல் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், குடியாத்தம் டவுன் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். போலி சான்றிதழ் கண்டறியப்பட்ட சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
The post டாக்டரின் போலி கையெழுத்து, சீலுடன் வழங்கப்பட்ட சான்றிதழ் அதிகாரிகள் விசாரணை குடியாத்தத்தில் ஆதார் முகவரி மாற்றம் செய்ய appeared first on Dinakaran.