×

ஜெயங்கொண்டம் அரசு கல்லூரி ஆண்டு விழா கல்வியை அடித்தளமாக கொண்டு செயல்பாடுகள் அமைய வேண்டும்

ஜெயங்கொண்டம், ஏப்.18: மாணவர்கள் தாங்கள் கற்கும் கல்வியை அடித்தளமாகக்கொண்டு மேலும் கற்று அதற்கேற்றவாறு செயல்பாடுகள் அமைய வேண்டும் என்று குத்தாலம் அரசு கல்லூரி முதல்வர் முனைவர் சுந்தரராசன் பேசினார். அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 5ம் ஆண்டு விழா, விளையாட்டு விழா மற்றும் கவின் கலை மன்ற விழா ஆகிய முப்பெரும் விழா கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழத்துடன் தொடங்கப்பட்டு கலைபண்பாட்டுத்துறையால் நடத்தப்படும் பரதநாட்டிய பயிற்சி பெறும் மாணவிகள் மற்றும் ஆசிரியரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இயற்பியல்துறை இணைப் பேராசிரியர் முனைவர் ராசமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் ரமேஷ் தலைமை வகித்து கல்லூரியின் ஆண்டறிக்கை வாசித்தார்.

உடற்கல்வி இயக்குனர் முனைவர் அன்பரசன் விளையாட்டுத்துறை ஆண்டறிக்கை வாசித்தார். முன்னாள் கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் (திட்டம் மற்றும் வளரச்சி) பன்னீர்செல்வம் தனது வாழ்த்துரையில், மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோர்களின் துயரை துடைக்கும் விதமாக தங்கள் கல்வி அமையவேண்டும் என்று கூறினார். குத்தாலம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் சுந்தரராசன் தனது வாழ்த்துரையில், மாணவர்கள் தற்போது கற்கும் கல்வியை அடித்தளமாக கொண்டு மேன்மேலும் கற்று அதற்கேற்றவாறு தங்கள் செயல்பாடுகள் அமையவேண்டும் என எடுத்துரைத்தார். புலியகுளம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் வீரமணி தனது சிறப்புரையில், மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை சரியாக திட்டமிட்டு சிறப்புடன் அமைத்துக்கொண்டு தங்களையும், தங்கள் குடும்பத்தையும் வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

விழாவில், பல்கலைக்கழக பருவத்தேர்வில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களை பெற்ற மாணவர்கள், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்கள் மற்றும் நுண்கலை மற்றும் கவின்கலை மன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. தமிழ்த்துறைத் தலைவர் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் வடிவேலன் நன்றி கூறினார். இந்நிகழ்வில் கல்லூரியின் அனைத்துத்துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

The post ஜெயங்கொண்டம் அரசு கல்லூரி ஆண்டு விழா கல்வியை அடித்தளமாக கொண்டு செயல்பாடுகள் அமைய வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Jayankondam Government College Annual Festival Activities ,Jayankondam ,Kutthalam Government College ,Principal ,Dr. ,Sundararasan ,Dinakaran ,
× RELATED கீழப்பெரம்பலூர் அரசு பள்ளியில் பிளஸ்2...