×

சென்னை மெரினா கடற்கரை உட்புறச் சாலையில் வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு : போலீஸ் கெடுபிடி

சென்னை : சென்னை மெரினா கடற்கரை உட்புறச் சாலையில் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காவிரி விவகாரம் தொடர்பாக, சேப்பாக்கத்தில் இன்று மாலை பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்த உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர். காவிரிக்காக போராடுவோர் மெரினாவில் மீண்டும் கூடிவிடக்கூடாது என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னை வாசிகள் பல ஆயிரம் பேர் காற்று வாங்க கூடுவர் என்பதால் போலீஸார் கெடுபிடி விதித்துள்ளனர்.  
 
முன்னதாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே விவசாய சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகிறது. திமுக உட்பட 9 கட்சிகள் சார்பில் ஏப்ரல் 1ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 23ம் தேதி திமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இந்நிலையில் மத்திய அரசிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க கோரியும், மெரினாவில் 29ம் தேதி போராட்டம் நடத்துவோம். சாதி, மதம், கட்சி, மொழி, இனம், கடந்து ஒன்று கூடுவோம், வென்று காட்டுவோம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதில் பங்கேற்க மாணவர்களும், இளைஞர்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் வைரலாக பரவியது. இதுகுறித்து உளவு பிரிவு போலீசார் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில், மெரினா கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

மெரினா கடற்கரைக்கு வரும் சாலைகளான, ராதாகிருஷ்ணன் சாலை, வாலாஜா சாலை, சிவானந்தம் சாலை, அவ்வை சண்முகம் சாலை, டாக்டர் பெசன்ட் சாலை, பாரதி சாலை, ராஜாஜி சாலை, சாந்தோம் சாலை ஆகிய பகுதிகளில் பேரிகார்டு வைத்து தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கலங்கரை விளக்கம் முதல் கண்ணகி சிலை வரை மெரினா உட்புற சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags :
× RELATED கேரளாவில் கடும் மழைப் பொழிவு...