×

சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்து விசாரணை; மாநில பாஜ துணைத்தலைவரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவு: டிஸ்சார்ஜ் ஆனவுடன் சிறையில் அடைக்கப்படுவார்

சேலம்: தர்மபுரியில் பாரத மாதா கோயில் பூட்டை உடைத்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்ட பாஜ மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கத்தை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் கடந்த 3 நாட்களுக்கு முன் பாஜகவினர், சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் இருக்கும் பாரத மாதா கோயில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். இதுதொடர்பான புகாரின் பேரில் பென்னாகரம் போலீசார், பாஜ மாநில துணைத்தலைவரான முன்னாள் எம்பி கே.பி.ராமலிங்கம், பென்னாகரம் வடக்கு ஒன்றிய தலைவர் சிவலிங்கம் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில், நேற்று முன்தினம் மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கத்தை போலீசார் கைது செய்தனர். பின்னர், கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கு முன் அரசு மருத்துவமனையில் உடல்நிலையை பரிசோதித்தனர். அப்போது, தனக்கு நெஞ்சுவலிப்பதாக கே.பி.ராமலிங்கம் கூறியதையடுத்து, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு கே.பி.ராமலிங்கத்திற்கு இருதயம் தொடர்பான அனைத்து பரிசோதனைகளையும் மருத்துவர்கள் மேற்கொண்டனர். தொடர்ந்து சிகிச்சையும் அளித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை பென்னாகரம் மாஜிஸ்திரேட், சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்து நேரடியாக விசாரித்தார். மருத்துவ சிகிச்சை தொடர்பாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, கே.பி.ராமலிங்கத்தை வரும் 29ம் தேதி வரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதால், உடனடியாக அவரை போலீசார் சிறையில் அடைக்க அழைத்துச் செல்லவில்லை. அவரை மருத்துவமனை நிர்வாகம் டிஸ்சார்ஜ் செய்தபின், சிறையில் அடைக்கவுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக இந்த விசாரணையின் போது, சேலம்அரசு மருத்துவமனை வளாகத்தில் பாஜகவினர் திரண்டிருந்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது….

The post சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்து விசாரணை; மாநில பாஜ துணைத்தலைவரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவு: டிஸ்சார்ஜ் ஆனவுடன் சிறையில் அடைக்கப்படுவார் appeared first on Dinakaran.

Tags : Salem Government Hospital ,BJP ,vice-president ,Salem ,state vice president ,KP Ramalingam ,Bharat Mata Temple ,Dharmapuri ,vice president ,Dinakaran ,
× RELATED விஷச் சாராயம் பலி எண்ணிக்கை 30-ஆக உயர்வு