×

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்தது: 400க்கும் அதிகமாக விமானங்கள் இயக்கம்

மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்தது. விமானங்களின் எண்ணிக்கையும் 400ஐ கடந்துள்ளது. 2 ஆண்டு கொரோனா பீதி ஓய்ந்ததால் சென்னை விமானநிலையம் பழையநிலைக்கு திரும்பியது. சென்னை விமான நிலையத்தில் விமான போக்குவரத்து மற்றும் பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வந்தன. 2019ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சென்னை விமான நிலையத்தில் நாளொன்றுக்கு 500 விமான சேவைகள் இயக்கப்பட்டு சாதனை படைத்தது. மும்பை, டெல்லி விமான நிலையங்களையடுத்து சென்னை விமான நிலையமும் இந்த சாதணை பட்டியலில் இணைந்தது.இந்நிலையில் 2020ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து கொரோனா வைரஸ் பாதிப்பால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் குறைந்தது. மார்ச் இறுதியில் இருந்து கொரோனா வைரஸ் பாதிப்பு, ஊரடங்கு காரணமாக விமானங்கள் ரத்து, பயணிகள் எண்ணிக்கை குறைவு என சென்னை விமான நிலையமே வெறிச்சோடியது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைந்துவிட்டது. அதுவும் தமிழகத்தில் மாநில அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை, அனைவருக்கும் இலவச தடுப்பூசி காரணமாக கொரோனாவே காணாமல் போய்விட்டது. தற்போது கொரோனா வைரஸ் உயிரிழப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை தமிழக அரசு முழுமையாக விலக்கியுள்ளது. சென்னை விமான நிலையத்தில் விமான பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் வெகுவாக விலக்கப்பட்டுள்ளன. இதனால் விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு முன்பு, 398 உள்நாட்டு விமானங்கள், 116 சர்வதேச விமானங்கள் என மொத்தம் 514 விமானங்கள் இயக்கப்பட்டன. நாளொன்றுக்கு 38,000 உள்நாட்டு பயணிகள், 8,000 சர்வதேச பயணிகள் பயணித்து கொண்டிருந்தனர். இந்நிலையில் 2 ஆண்டுகளுக்குப் பின்பு தற்போது, இதுவரை இல்லாத அளவுக்கு பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தில் இருந்து சென்னையில் இருந்து மலேசியா, தாய்லாந்து, பிரான்ஸ், சிங்கப்பூர், ஐக்கிய அரபு நாடுகள், வளைகுடா நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு 37 புறப்பாடு விமானங்கள், 37 வருகை விமானங்கள் என நாளொன்றுக்கு 74 சர்வதேச விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல் 328  உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படுகின்றன. சென்னை விமான நிலையத்தில் தற்போது 402 விமானங்களில், பயணிகள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்து விட்டது. உள்நாட்டு விமான நிலையத்தில் 328 விமானங்களில் சுமார் 40 ஆயிரம் வருகை, புறப்பாடு பயணிகளும், 74 சர்வதேச விமானங்களில் சுமார் 11 ஆயிரம் வருகை, புறப்பாடு பயணிகளும் என மொத்தம் 51 ஆயிரம் பயணிகள் ஒரு நாளில் பயணிக்கின்றனர். இந்த மாதத்தில் இருந்து மேலும் பல சர்வதேச விமானங்களும், உள்நாட்டு விமானங்களும் புதிதாக இயக்கப்பட உள்ளன. எனவே அடுத்த சில நாட்களில் பயணிகள் மற்றும் விமானங்களின்  எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. 2 ஆண்டுகளுக்கு பின்பு பயணிகள் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து 50 ஆயிரத்தை கடந்துள்ளது, விமானநிலைய வட்டாரத்தில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

The post சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்தது: 400க்கும் அதிகமாக விமானங்கள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : chennai airport ,Meenambakkam ,
× RELATED சென்னை விமானநிலையத்திற்கு 5வது...