×

சிவகாசி மாநகராட்சியோடு இணையும் 9 ஊராட்சிகள்; 100 நாள் வேலைவாய்ப்பு பறிபோகும் அபாயம்: 7 ஆயிரம் தொழிலாளர்கள் கவலை

சிவகாசி, நவ.5: சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு 2021 அக்.21ல் சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தரம் உயர்த்தப்பட்ட சிவகாசியுடன் திருத்தங்கல் நகராட்சி தவிர சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட ஆனையூர், செங்கமலநாச்சியார்புரம், தேவர்குளம், சாமிநத்தம், பள்ளபட்டி, நாரணாபுரம், அனுப்பன்குளம், விஸ்வநத்தம், சித்துராஜபுரம் ஆகிய 9 பெரிய ஊராட்சிகள் சேர்க்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதற்கான அனைத்து அனுமதிகளும் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் இருந்து பெறப்பட்டது. தற்போது சிவகாசி, திருத்தங்கல் 2 நகராட்சி பகுதிகளை மட்டும் சேர்த்து புதிய மாநகராட்சி பகுதிகள் உருவாக்கப்பட்டு இயங்கி வருகின்றது. 9 ஊராட்சிகளை மாநகராட்சியோடு இணைக்கும் அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டுள்ளது.

மாநகராட்சியோடு 9 ஊராட்சிகள் இணையும் பட்சத்தில் அந்த ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் நிறுத்தப்படும். சிவகாசி ஒன்றியத்தில் 54 ஊராட்சிகளில் 27ஆயிரத்து 358 பேர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பதிவு செய்து பணிபுரிந்து வருகின்றனர். மாநகராட்சியோடு 9 ஊராட்சிகள் இணையும் பட்சத்தில் அந்த ஊராட்சிகளில் 7 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்தினர் கூறும்போது, வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் கிராமப்புற மக்களின் தற்காலிக நிவாரணமாகவும் அவர்களின் முக்கிய வேலை வாய்ப்பாகவும் இருப்பது 100 நாள் வேலை திட்டம்தான். இந்தத் திட்டம் கடந்த 2006ம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் என்ற பெயரில் கொண்டு வரப்பட்டது.

ஊராட்சி மன்றங்கள் புதிதாக உருவாகும் மாநகராட்சியோடு இணையும் வாய்ப்புகள் இருக்கிறது. அப்படி இணைகிறபொழுது அந்த கிராமங்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம் இல்லாமல் போகும். மக்களின் வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம் செய்து புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றனர்.

The post சிவகாசி மாநகராட்சியோடு இணையும் 9 ஊராட்சிகள்; 100 நாள் வேலைவாய்ப்பு பறிபோகும் அபாயம்: 7 ஆயிரம் தொழிலாளர்கள் கவலை appeared first on Dinakaran.

Tags : 9 Panchayats ,Sivakasi Corporation ,Sivakasi ,Thiruthangal Municipalities ,Sivakasi Municipal Corporation ,Tirutangal Municipality ,Anayur ,Sengamalanachyarpuram ,Devarkulam ,Saminattam ,Pallapatti ,Naranapuram ,Paddankulam ,Viswanantham ,Dinakaran ,
× RELATED சிவகாசி மாநகராட்சி வார்டுகளில் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு