×

சின்னசேலம் அருகே கொள்ளையர்கள் அட்டூழியம் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 5 பவுன் செயின் பறிப்பு

சின்னசேலம், மே 23: சின்னசேலம் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 5 பவுன் செயினை பறித்து சென்ற மர்ம ஆசாமிகள், மற்றொரு வீட்டில் ரூ.50 ஆயிரம் ரொக்கப்பணத்தை திருடி சென்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே மேலூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் முத்துசாமி மனைவி பூபதி(60). விவசாய தொழிலாளி. இவர், நேற்றுமுன்தினம் தூங்கிக்கொண்டிருந்தபோது, வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் பூபதியிடம் கத்தியை காட்டி நகை கேட்டுள்ளனர். அதற்கு மூதாட்டி பூபதி தன்னிடம் எதுவும் இல்லை என்றதால் அவரை தாக்கி, கத்தியால் குத்தியுள்ளனர். அவர் சத்தம் போடவே தப்பியோடிவிட்டனர்.

மற்றொரு சம்பவம்: சின்னசேலம் அருகே எரவார் தெற்கு தெருவை சேர்ந்தவர் பழனியம்மாள்(61). இவருக்கு 2 வீடுகள் உள்ளது. அதில் நேற்றிரவு ஒரு வீட்டை பூட்டிவிட்டு மற்றொரு வீட்டில் பழனியம்மாள் படுத்திருந்தார். அப்போது அந்த வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று ரூ.50 ஆயிரம் திருடியுள்ளனர். அப்போது அருகில் உள்ள வீட்டில் இருந்து ஜீவா(36) என்ற பெண் ஏதேச்சையாக வெளியே வந்தபோது கத்தியை காட்டி மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்துள்ளனர். அந்த பெண் கொள்ளையர்களுடன் போராடினார். இதில் செயின் அறுந்து 5பவுன் மட்டுமே கொள்ளையர்களிடம் சிக்கியது. மீதி 2பவுன் ஜீவாவின் கைவசம் மாட்டிக்கொண்டது. அப்போது கொள்ளையர்கள் ஜீவாவின் கழுத்தில் கத்தியால் கிழித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ரமேஷ், சின்னசேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சின்னசேலம் அருகே கொள்ளையர்கள் அட்டூழியம் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 5 பவுன் செயின் பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Chinnasalem ,
× RELATED மனைவியை கொன்று புதைத்து கணவன் தூக்கிட்டு தற்கொலை