×

சித்ரா பவுர்ணமி கிரிவலம் தொடங்கியது; ஏராளமான பக்தர்கள் திரண்டனர்: கோயிலிலும் கூட்டம் அலைமோதியது

திருவண்ணாமலை, மே 5: திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு, நேற்று இரவு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இன்று இரவு பக்தர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற சித்ரா பவுர்ணமி விழா இன்று நடக்கிறது. அதையொட்டி, சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று இரவு 11.59 மணிக்கு தொடங்கியது. இன்று இரவு 11.35 மணிக்கு நிறைவடைகிறது. இன்று இரவு சித்ரா பவுர்ணமி கிரிவலத்துக்கு உகந்தது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனாலும், நேற்று மாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவியத் தொடங்கினர். அண்ணாமலையார் கோயிலில் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது. நேற்று இரவு முதல் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இரவு 10 மணிக்கு பிறகு பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது.

எனவே, அண்ணாமலையார் கோயிலில் விரைவு தரிசனத்துக்கு வசதியாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராஜகோபுரம் வழியாக பொது தரிசன வரிசையும், திட்டி வாசல் வழியாக கட்டண தரிசன வரிசையும் அனுமதிக்கப்படுகிறது. தரிசனம் முடிந்ததும், பே கோபுரம் வழியாக வெளியே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன. நேற்று இரவு முதல் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வதால், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. அதனை, கலெக்டர் முருகேஷ் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். எந்த இடத்திலும் நெரிசல் ஏற்படாமல் தவிர்க்க தேவையான வசதிகள் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை நகரின் முக்கிய சாலைகளில் 13 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கனரக வாகனங்கள் புறவழிச்சாலை வழியாக திருப்பிவிடப்படுகிறது. கார், வேன்களுக்கும் நகருக்குள் அனுமதியில்லை. அதற்காக, 55 இடங்களில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தபபட்டுள்ளது. வெளியூர் பக்தர்களின் வசதிக்காக, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சுமார் 2 ஆயிரம் சிறப்பு பஸ்கள் நேற்று முதல் இயக்கப்படுகிறது. தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து கிரிவலப்பாதைக்கு அருகே வருவதற்கு வசதியாக, 123 இணைப்பு பஸ்கள் இலவசமாக இயக்கப்படுகிறது. அதேபோல், வேலூர் மற்றும் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது

நகரின் முக்கிய இடங்களிலும், கோயில் மற்றும் தற்காலிக பஸ் நிலையங்களிலும் 85 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 15 இடங்களில் 108 ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணபை்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதோடு, கிரிவலப்பாதை உள்ளிட்ட இடங்களில் 34 காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், அன்னதானம் அளிக்க 120 இடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில், 3 டிஐஜிக்கள், 7 எஸ்பிக்கள் உள்பட 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நகர் முழுவதும் சிசிடிவி கேமரா கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

The post சித்ரா பவுர்ணமி கிரிவலம் தொடங்கியது; ஏராளமான பக்தர்கள் திரண்டனர்: கோயிலிலும் கூட்டம் அலைமோதியது appeared first on Dinakaran.

Tags : Chitra Poornami Krivalam ,Thiruvannamalai ,Krivalam ,Chitra Pournami festival ,Tiruvannamalai ,Chitra Pournami Krivalam ,
× RELATED ஆர்டிஓ, தாலுகா அலுவலகங்களுக்கு...