×

சாலையோரத்தை மது பாராக மாற்றி குடிமகன்கள் அட்டகாசம்

கரூர்: கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலையோரம் நின்று மது அருந்தும் நிகழ்வு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாவட்டத்தில் 90க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. பெரும்பாலான கடைகளின் அருகே பார்கள் செயல்படுகிறது. சில கடைகளில் பார் வசதி இல்லை. மாநகராட்சியை தாண்டி, புறநகர்ப்பகுதிகள் மட்டுமின்றி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் செயல்படுகிறது. இதுபோன்ற கடைகளுக்கு வரும் சில குடிமகன்கள், கூட்டாக சேர்ந்து கொண்டு, சரக்குகளை வாங்கி சாலையோரமே நின்று குடித்துவிட்டு செல்கின்றனர். மேலும், குடித்துவிட்டு, பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகளை சாலையோரமே தூக்கி வீசி எறிந்து விட்டுச் செல்கின்றனர். இதுபோன்ற நிகழ்வுகள் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

சாலையோரத்தில் உள்ள பாலக்கட்டைகள் போன்றவற்றை இரவு நேரத்தில் ஆக்ரமித்து, குடிமகன்கள் குடித்து கும்மாளமிடுவதால் அந்தந்த பகுதி மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இரவு நேரம் மட்டுமின்றி, பகல் நேரங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகள் பரவலாகவே நடைபெறுகிறது. இதனை கட்டுப்படுத்த அந்தந்த காவல் நிலைய போலீசார் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி, சாலை மற்றும் பாலக்கட்டைகளை ஆக்ரமித்து, குடிக்கும் நிகழ்வுகளை கண்காணித்து தேவையான அறிவுரைகளை வழங்கி தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

The post சாலையோரத்தை மது பாராக மாற்றி குடிமகன்கள் அட்டகாசம் appeared first on Dinakaran.

Tags : Karur ,
× RELATED கரூர்-முக்கணாங்குறிச்சி சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா?