×

கொரோனா காலத்தில் மாணவர்கள் நலனில் சமரசம் கிடையாது சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து: பிரதமர் மோடி அறிவிப்பு

புதுடெல்லி: கொரோனா பரவல் காரணமாக, சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இந்த பெருந்தொற்று காலத்தில் மாணவர்கள் பாதுகாப்பே முக்கியம், அதில் சமரசம் செய்து கொள்ள முடியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொரோனா 2வது அலை பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி நடக்க இருந்த சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மே 4ம் தேதி நடக்க இருந்த 12ம் வகுப்பு தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது குறித்து மத்திய கல்வி அமைச்சகம் ஆலோசனையை தொடங்கியது. முக்கிய பாடங்களுக்கு மட்டும் தேர்வு நடத்துவது, குறுகிய நேர தேர்வுகளை நடத்துவது என சில யோசனைகளை முன்வைத்தது. ஜூலை 15ம் தேதி முதல் ஆகஸ்ட் 26ம் தேதி வரை தேர்வு நடத்தி செப்டம்பரில் முடிவு அறிவிக்கலாம் என்றும் திட்டமிட்டது. இதுதொடர்பாக, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் சமீபத்தில் அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் மற்றும் அமைச்சக செயலாளர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். தேர்வு நடத்துவது தொடர்பாக அனைத்து மாநில அரசுகள், பெற்றோர், மாணவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இந்த விஷயத்தில் ஜூன் 1ம் தேதி இறுதி முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் பொக்ரியால் தெரிவித்திருந்தார்.இதற்கிடையே, தேர்வை நடத்த பெற்றோர்களும், மாணவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். . மேலும், தேர்வை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஜூன் 3ம் தேதிக்குள் தேர்வு குறித்து அரசு தனது முடிவை அறிவிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்நிலையில், பொதுத் தேர்வு தொடர்பாக இறுதி முடிவு எடுக்க பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று மாலை நடந்தது. இதில், மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், ராஜ்நாத் சிங், அமித் ஷா, மத்திய கல்வி அமைச்சக செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநில அரசுகள் கூறிய கருத்துகள், பெற்றோர், மாணவர்களின் கருத்துகள் குறித்து பிரதமர் மோடியிடம் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்வதென கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இது குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், ‘நீண்ட ஆலோசனைக்குப் பின், எதிர்கால இளம் தலைமுறையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், மாணவர்களுக்கு சாதகமாகவும் இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்,’ என கூறி உள்ளார். மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘ஆய்வுக் கூட்டத்தில், இதுவரை நடைபெற்ற விரிவான ஆலோசனைகள் மற்றும் மாநில அரசுகள் உட்பட அனைத்து தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்கள் குறித்து பிரதமரிடம் விரிவாக விளக்கப்பட்டது. பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான அச்சங்கள் நிலவுவதால் சிபிஎஸ்இ பொதுத் தேர்வை ரத்து செய்வதென உயர்மட்ட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மாணவர்களின் உடல் நலனும், பாதுகாப்பும் மிக முக்கியமானது என்றும், அதில் எந்த சமரசமும் செய்ய முடியாது எனவும் பிரதமர் மோடி எடுத்துரைத்தார். மேலும், தேர்வு தொடர்பாக மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே உள்ள கவலையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டியது அவசியம் என குறிப்பிட்ட அவர், இதுபோன்ற மன அழுத்த சூழ்நிலையில் மாணவர்களை தேர்வுக்கு வர நிர்பந்திக்க முடியாது என்றும் சுட்டிக் காட்டினார்’ என கூறப்பட்டுள்ளது. தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கான மதிப்பெண் நன்கு வரையறுக்கப்பட்ட அளவுகோல் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்படும் என்றும், மாணவர்கள் தேர்வு எழுத விரும்பினால், அதற்கான உகந்த சூழல் வரும்போது தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்படும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவால், சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர். இதே போல், இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (சிஐசிஎஸ்இ) நடத்தும் ஐஎஸ்சி பிளஸ் 2 தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மிகப்பெரிய நிம்மதிடெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மத்திய அரசின் முடிவை வரவேற்றுள்ளார். அவரது டிவிட்டர் பதிவில், ‘நமது குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து மிகுந்த கவலை கொண்டிருந்தோம். இப்போது மிகப்பெரிய நிம்மதி கிடைத்துள்ளது,’ என்றார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ‘உங்கள் குரலை கேட்கச் செய்ததற்காக 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்துக்கள், நிச்சயமற்ற, நெருக்கடிகளை தாண்டி, இனி நிதானமாக கொண்டாட நீங்கள் தகுதியானவர்கள். மகிழ்ச்சியான, ஆரோக்கியமான, பிரகாசமான எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள்,’ என கூறி உள்ளார்.* சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முழுமையாக ரத்து செய்யப்படுவது இதுவே முதல் முறை.* கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்வுகள் தொடங்கி நடந்து வந்த நிலையில், தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து எஞ்சிய தேர்வுகள் மட்டும் ரத்து செய்யப்பட்டன….

The post கொரோனா காலத்தில் மாணவர்கள் நலனில் சமரசம் கிடையாது சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து: பிரதமர் மோடி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : CBSE Plus ,PM Modi ,New Delhi ,Corona ,Central Government ,CBSE ,Dinakaran ,
× RELATED என் அம்மா உயிருடன் இருந்தவரை என்...