×

கொசுப்புழு உற்பத்திக்கு காரணமாக இருந்தால் ₹5 ஆயிரம் அபராதம்

நாமக்கல், செப்.29: நாமக்கல் மாவட்டத்தில், டெங்கு காய்ச்சல் பாதிப்பை தடுக்க, பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகராட்சி மற்றும் பேரூராட்சியில் பணியாளர்கள் வீடு, வீடாக சென்று கொசுப்புழு உற்பத்தியாகாமல் மருந்து தெளித்து வருகிறார்கள். கொசுப்புழு உற்பத்தியாகும் வகையில் நடந்து கொள்பவர்களுக்கு ₹5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் நகராட்சியில் உள்ள 39 வார்டுகளில், கடந்த ஒரு மாதமாக டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாமக்கல் நகராட்சியில், கடந்த ஆண்டு மழை காலத்தின் போது, 12 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டது. இந்த ஆண்டு இதுவரை 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு, குணமடைந்துள்ளனர்.

இவர்கள் வசிக்கும் பகுதியில், நகராட்சி மூலம் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. எர்ணாபுரம் வட்டார மருத்துவர்கள் அடங்கிய குழுவினர், நகராட்சியில் 5 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தி, பொதுமக்களை பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கி உள்ளனர். டெங்கு தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நகராட்சி கமிஷனர் சென்னுகிருஷ்ணன் உத்தரவுப்படி, பள்ளி மாணவியருக்கு டெங்கு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.பள்ளி வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், நகராட்சி பணியாளர்கள் கொசுப்புழு தடுப்பு பணியை மேற்கொண்டனர். பள்ளி வளாகம் முழுவதும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, கொசுப்புழு உற்பத்தியாகும் அனைத்து பொருட்களும் அகற்றப்பட்டது.

பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு பலகை மூலம் கொசு புழு உற்பத்தியாகும் பொருட்கள் குறித்து, துப்புரவு அலுவலர் திருமூர்த்தி விளக்கம் அளித்தார். மேலும், தண்ணீர் சேமித்து வைக்கும் பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதில் துப்புரவு ஆய்வாளர்கள் பாஸ்கர், பழனிசாமி, தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர்கள், பரப்புரையாளர்கள், களப்பணி உதவியாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து நகராட்சி துப்புரவு அலுவலர் திருமூர்த்தி கூறியதாவது: நாமக்கல் நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும், டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. தினமும் 50 பணியாளர்கள் வீடு, வீடாக சென்று, கொசுப்புழு ஒழிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். ஏற்கனவே டெங்கு பாதித்த பகுதியில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படுகிறது. அனைத்து அரசு மற்றும் தனியார் கட்டிடங்களில் சுத்தம் செய்தல் மற்றும், பயனற்று கிடக்கும் பொருட்களை அகற்றுதல் பணி, பயனற்று கிடக்கும் பழைய டயர்களை அகற்றுதல் போன்ற பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகிறது. கொசுப்புழுக்கள் உற்பத்திக்கு காரணமாக இருப்பவர்களுக்கு ₹500 முதல் ₹5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். எனவே, பொதுமக்கள் தங்கள் குடியிருப்புகளின் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.இவ்வாறு அவர்
தெரிவித்தார்.

The post கொசுப்புழு உற்பத்திக்கு காரணமாக இருந்தால் ₹5 ஆயிரம் அபராதம் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Dinakaran ,
× RELATED நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில்...