×

கடந்த மார்ச் மாதத்தில் தங்கம் இறக்குமதி 40 சதவீதம் சரிவு: நிதிப்பற்றாக்குறையால் ஏற்றுமதி பாதிப்பு

புதுடெல்லி: இந்தியாவின் ஏற்றுமதி கடந்த மார்ச் மாதத்தில் சரிவை சந்தித்துள்ளது. ஆனால், கடந்த நிதியாண்டு முழுவதும்  கணக்கிடும்போது அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் ஏற்றுமதி 0.66 சதவீதம் சரிவடைந்துள்ளது. பெட்ரோலியம் மற்றும் நகைத்துறை சார்ந்த ஏற்றுமதி குறைந்ததே  இதற்கு முக்கிய காரணம். கடைசியாக கடந்த ஆண்டு அக்டோபரில் ஏற்றுமதி 1.12 சதவீதம் சரிந்திருந்தது. இதையடுத்து 4  மாதங்களுக்கு பிறகு ஏற்றுமதி மீண்டும் சரிவை சந்தித்துள்ளது.

 இறக்குமதியை பொறுத்தவரை கடந்த மார்ச் மாதத்தில் 7.15 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது 4,280 கோடி டாலர் மதிப்பிலான  பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதனால் வர்த்தக பற்றாக்குறை 1,369 கோடி டாலராக அதிகரித்துள்ளது என வர்த்தக  அமைச்சக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. கடந்த மாதத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதி 1,111 கோடி டாலராக உள்ளது. முந்தைய ஆண்டு மார்ச் மாதத்தை விட இது 13.92 சதவீதம்  அதிகம். எண்ணெய் சாரா இறக்குமதி 4.96 சதவீதம் உயர்ந்து 3,169 கோடி டாலராக உள்ளது.

கடந்த நிதியாண்டில் கச்சா எண்ணெய் இறக்குமதி 25.47 சதவீதம் உயர்ந்து 10,911 கோடி டாலராக உள்ளது. தங்கம் இறக்குமதி 40 சதவீதம்  சரிந்து 249 கோடி டாலராக உள்ளது.
 கடந்த நிதியாண்டை பொறுத்தவரை ஏற்றுமதி 9.78 சதவீதம் அதிகரித்து 30,284 கோடி டாலராக உள்ளது. இதுபோல் கடந்த நிதியாண்டில்  இறக்குமதி 19.59 சதவீதம் உயர்ந்து 45,967 கோடி டாலராக உள்ளது. இதனால் வர்த்தக பற்றாக்குறை 15,683 கோடி டாலராக  அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டில் இது 10,850 கோடி டாலராக மட்டுமே இருந்தது.
 வர்த்தக பற்றாக்குறை 2012-13 நிதியாண்டில் 19,030 கோடி டாலராக இருந்தது. அதன்பிறகு தற்போதுதான் மிக அதிகமாக உள்ளது.

தொழிலாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்பை வழங்கும் துறைகளான நகை மற்றும் நவரத்தினங்கள் துறை, ஜவுளித்துறை, சணல்,  விவசாய பொருட்கள் சார்ந்த ஏற்றுமதி சரிந்ததுதான் மிக முக்கிய காரணம். எனவே இது கவலை அளிக்கக்கூடிய விஷயம். இந்த துறைகளின் ஏற்றுமதி அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என  இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Tags :
× RELATED அக்-06: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை!