×

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 1.90 லட்சம் மலர் நாற்றுக்கள் நடவு பணி

 

குன்னூர், ஜூலை 6: இரண்டாம் கட்ட சீசனுக்காக சிம்ஸ் பூங்காவில், ஒரு லட்சத்து 90 ஆயிரம் மலர் நாற்றுக்கள் நடவு பணி நேற்று முதல் துவங்கியது.  நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் சிம்ஸ் பூங்கா மற்றும் காட்டேரி பூங்கா செயல்பட்டு வருகிறது. இயற்கை எழில் சூழ்ந்த இந்த பூங்காக்கள் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக செயல்பட்டு வருகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இயற்கை சூழல் மிகுந்த மேகமூட்டங்கள், வண்ணப்பூக்கள், மலை முகடுகள், நீர்வீழ்ச்சிகள் என்று பல்வேறு இயற்கை காட்டுகள் காண்போரை வசீகரிக்கிறது. கடந்த மே மாதம் கோடை சீசன் நிறைவடைந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு இரண்டாவது சீசன் செப்டம்பர் மாதம் துவங்க உள்ளதால், பூங்காகளில் உள்ள மண்ணை சமன் செய்தும், புல் தரைகளை பொலிவு படுத்தியும் அலங்கரிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் சிம்ஸ்பூங்காவில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் மலர் நாற்றுக்கள் நடவு பணிகள் நேற்று முதல் துவங்கியது. இம்முறை உள்நாட்டிலேயே தயார் செய்யப்பட்ட பிரஞ்ச் மேரி கோல்டு, பிகோனியா, டேலியா, பால்சம், உள்ளிட்ட 75 வகையான மலர் நாற்றுகள் நடவுசெய்யும் பணிகள் துவங்கப்பட்டு உள்ளன. இந்த நாற்றுக்கள் அனைத்தும் 2ம் கட்ட சீசனுக்கு சுற்றுலா பயணிகளின் கண்களை கவரும் விதமாக தோட்டக்கலை சார்பில் சிறப்பாக செய்து வருகின்றனர். நேற்று தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் ஷிபிலா மேரி நடவு பணிகளை துவங்கி வைத்தார். இதில், பூங்கா ஊழியர்கள் அனைவரும் இணைந்து பூங்கா முழுவதும் நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 1.90 லட்சம் மலர் நாற்றுக்கள் நடவு பணி appeared first on Dinakaran.

Tags : SIMS Park, Coonoor ,Coonoor ,SIMS Park ,Kateeri ,Horticulture Department ,Coonoor, Nilgiris district… ,Dinakaran ,
× RELATED குன்னூர் சிம்ஸ் பூங்கா பழப்பண்ணையில் 3...