×

காப்பாற்ற முயன்ற தீயணைப்பு அதிகாரியும் சிகிச்சை பலனின்றி சாவு ஆரணியில் பரிதாபம் தீயில் சிக்கி மனைவி இறந்த நிலையில்

ஆரணி, ஜூலை 13: ஆரணியில் தீ விபத்தில் சிக்கி மனைவி இறந்த நிலையில், அவரை காப்பாற்ற முயன்ற தீயணைப்பு அதிகாரியும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் அருணகிரிசத்திரம் கண்ணப்பன் தெருவை சேர்ந்தவர் சரவணன்(55). ஆரணி தீயணைப்பு நிலையத்தில் அலுவலராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஜெயலட்சுமி(48). இவர்களது மகன்கள் விக்னேஷ்(26), ஜெகதீசன்(21). இவர்களில் விக்னேஷ் கல்லூரி முடித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். ஜெகதீசன் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் ரேடியாலஜி இறுதியாண்டு படித்து வருகிறார். சரவணன் தனது மனைவி ஜெயலட்சுமியுடன் ஆரணி வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 10ம் தேதி ஜெயலட்சுமி வீட்டில் சமைப்பதற்காக சமையல் அறைக்கு சென்றார். அப்போது, கடந்த சில மாதங்களாக ரேஷன் கடையில் வாங்கி வைத்த மண்ணெண்ணெய்யை பயன்படுத்தாமல் இருந்ததால் வீணாகி விடும் என கருதி ஸ்டவ்வில் ஊற்றி பற்ற வைத்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக ஜெயலட்சுமி சேலையில் தீப்பிடித்து உடல் முழுவதும் மளமளவென தீ பரவி வலியால் அலறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு ஓடிவந்த சரவணன், மனைவி சேலையில் தீப்பிடித்து எரிவதை பார்த்து அதிர்ச்சியடைந்த காப்பாற்ற முயன்றார். உடனே சரவணனின் உடலிலும் தீப்பிடித்து எரிந்தது. இருவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். ஆனால், முடியவில்லை. இதனால் ஜெயலட்சுமி தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த ஆரணி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜெயலட்சுமி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மனைவியை காப்பாற்ற முயன்றதில் பலத்த தீக்காயமடைந்த சரவணனை மீட்டு அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், சரவணன் மேல்சிகிச்கை்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்ைச அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு சரவணன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து, சரவணன் மகன் விக்னேஷ் கொடுத்த புகாரின்பேரில் ஆரணி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்தில் கணவன், மனைவி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post காப்பாற்ற முயன்ற தீயணைப்பு அதிகாரியும் சிகிச்சை பலனின்றி சாவு ஆரணியில் பரிதாபம் தீயில் சிக்கி மனைவி இறந்த நிலையில் appeared first on Dinakaran.

Tags : Arani ,
× RELATED ஆரணி பேரூராட்சி பஜார் பகுதியில்...