×

காந்தி ஜெயந்தியன்று விடுமுறை அளிக்காத 65 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

 

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியன்று விடுமுறை அளிக்காத 65 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜெயந்த், தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் ஆகியோர் அறிவுறுத்தலின் படியும், சென்னை கூடுதல் தொழிலாளர் ஆணையர் உமாதேவி மற்றும் சென்னை தொழிலாளர் இணை ஆணையர் ரமேஷ் ஆகியோர் வழிகாட்டுதல் படியும், திருவள்ளூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஷோபனா தலைமையில் தேசிய பண்டிகை விடுமுறை தினமான நேற்று முன்தினம் காந்தி ஜெயந்தி அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் கூட்டாய்வு மேற்கொண்டனர்.

இதில் 1958ம் வருட தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் தேசிய பண்டிகை, சிறப்பு விடுமுறைகள் சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காமலும், முறையாக விதிமுறைகளை பின்பற்றாமலும் செயல்பட்ட 65 நிறுவனங்கள் கண்டறியப்பட்டது. இதுகுறித்து தொழிலாளர் உதவி ஆணையர் ஷோபனா கூறுகையில், தேசிய விடுமுறை தினங்களில் தொழிலாளர்கள் பணி செய்ய அனுமதிக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கு அன்றைய தினத்தில் இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும். அல்லது வேறு தினத்தில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யாமல், சம்பந்தப்பட்ட தொழிலாளர் துணை ஆய்வாளர் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்திய நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

The post காந்தி ஜெயந்தியன்று விடுமுறை அளிக்காத 65 நிறுவனங்கள் மீது நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Gandhi Jayanti ,Tiruvallur ,Tamil Nadu Labor ,Dinakaran ,
× RELATED மாவட்டம் முழுவதும் மழையால் சேதமான சாலைகள் சீரமைப்பு