×

காதை செவிடாக்கிய 21 ஏர்ஹாரன் பறிமுதல்

கோவை, ஏப். 18: கோவை மாவட்டத்தில், குறிப்பாக, கோவை மாநகரில் அரசு மற்றும் தனியார் பஸ்களில் பொருத்தப்பட்டுள்ள ஏர்ஹாரன் பொதுமக்களுக்கும், இருசக்கர வாகன ஓட்டுனர்களுக்கும் பெரும் இடையூறாக உள்ளது. இந்த வகை ஏர்ஹாரன், காதை செவிடாக்கும் வகையில் பொருத்தப்பட்டு, இயக்கப்படுகிறது என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் பவன்குமாருக்கு ஏராளமான புகார் மனுக்கள் வந்தன. இதையடுத்து, இவ்வகை ஏர்ஹாரன் பொருத்திய பஸ்களை தணிக்கை செய்து, அதிரடியாக அகற்ற மாவட்ட கலெக்டர் பவன்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து, கோவை சரக போக்குவரத்து இணை ஆணையாளர் அழகரசு மேற்பார்வையில், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் விஸ்வநாதன் (கோவை சென்ட்ரல்), பிரதீபா (கோவை மேற்கு), பூங்கோதை (கோவை தெற்கு) ஆகியோர் தலைமையில் 10க்கும் மேற்பட்ட மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நேற்று காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தில் அதிரடி ரெய்டு நடத்தினர். அரசு மற்றும் தனியார் பஸ்களில் சோதனை நடத்தினர்.

மொத்தம் 21 பஸ்களில் ரெய்டு நடத்தினர். இவை அனைத்திலும் அதிக சப்தம் எழுப்பக்கூடிய ஏர்ஹாரன் பொருத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இவை அனைத்தையும் பறிமுதல் செய்தனர். இந்த அதிரடி ரெய்டு காந்திபுரம் பஸ் நிலையத்தில் சில மணி நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:ஒலி மாசு என்பது, இருசக்கர வாகனங்களில் செல்வோர் மற்றும் சாலையோரம் நடந்து செல்வோர் என அனைத்து தரப்பினரையும் பாதிக்கிறது. பலரது காதுகளை செவிடாக்குகிறது. அதனால், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் 90 டெசிபில் அளவுக்கு அதிகமான ஏர்ஹாரன் பொருத்த தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துள்ளது. ஆனாலும், அரசு மற்றும் தனியார் பஸ்களில் 90 டெசிபில் அளவுக்கு அதிகமான ஏர்ஹாரன் பொருத்தப்பட்டுள்ளது.

இதை கண்டறிந்து பறிமுதல் செய்து வருகிறோம். சோதனை நடத்திய 21 பஸ்களிலும் 100 டெசிபில் அளவுக்கு அதிகமாக சப்தம் எழுப்பக்கூடிய ஏர்ஹாரன் பொருத்தப்பட்டிருந்தது. இவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பஸ்கள், மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு ஏர்ஹாரன் ெபாருத்த வேண்டும். தேவையின்றி, நகர்ப்பகுதிகளில் ஏர்ஹாரன் பயன்படுத்தக்கூடாது. இதுபோன்ற நடவடிக்கை தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post காதை செவிடாக்கிய 21 ஏர்ஹாரன் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Coimbatore district ,Dinakaran ,
× RELATED 25 ஆண்டுகளுக்கு கழித்து ரீ – ரிலீஸ்...