×

காதல் கணவருடன் சேர்த்து வைக்க கோரி வீட்டு முன் மனைவி தர்ணா போராட்டம்: ஒடுகத்தூர் அருகே பரபரப்பு

ஒடுகத்தூர், நவ.5: ஒடுகத்தூர் அருகே காதல் கணவருடன் தன்னை சேர்த்து வைக்கக்கோரி வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மனைவி நேற்று எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த ஓட்டேரிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விஷ்வா(23). இவர் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் இன்ஜினீயரிங் கல்லூரியில் படித்துள்ளார். தற்போது வேலூரில் உள்ள தனியார் செல்போன் ஷோரூமில் வேலை செய்து வருகிறார். அதேபோல், திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் அடுத்த திருமலை குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஐஸ்வர்யா(20), இவர் அணைக்கட்டு அருகே இயங்கி வரும் ஒரு நர்சிங் கல்லூரியில் படித்துள்ளார். இவர்கள் இருவரும் கல்லூரிக்கு பஸ்சில் செல்லும்போது பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலித்து வந்தனர். இந்த விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்து, காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, ஐஸ்வர்யா தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி கடந்த 2023ம் ஆண்டு விஷ்வாவை பெற்றோர் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால், சில மாதங்களிலேயே அந்த கர்ப்பம் கலைந்துவிட்டதாக தனது காதல் கணவரிடம் கூறியுள்ளார். அன்று முதல் கணவன் மனைவிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த பிரச்னையால் ஐஸ்வர்யா கோபித்து கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், சிறிது நாட்கள் கழித்து மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ ஐஸ்வர்யா நேற்று முன்தினம் தனது மாமனார் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, தனது கணவருடன் தனியாக வாழ வேண்டும் என்று கூறி மாமனார், மாமியாரிடம் கூறியுள்ளார். ஆனால், அதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, தனது கணவருடன் தன்னை சேர்த்து வைக்க கூறி திடீரென்று ஐஸ்வர்யா காதல் கணவரின் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

இதுகுறித்து, தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இளம் பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தன் கணவருடன் சேர்ந்து வாழ விடாமல் அவரது குடும்பத்தினர் தடுக்கின்றனர். எனவே, தனது கணவருடன் சேர்த்து வைக்கும்படி போலீசாரிடம் இளம்பெண் கண்ணீர் விட்டு கதறி அழுதார். அவரை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட ஐஸ்வர்யா நேற்று எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளனர். காதல் கணவரின் வீட்டு முன் இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post காதல் கணவருடன் சேர்த்து வைக்க கோரி வீட்டு முன் மனைவி தர்ணா போராட்டம்: ஒடுகத்தூர் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Tarna ,Odukatur ,Odukathur ,Vishwa ,Oteripalayam village ,Vellore district ,
× RELATED ஒடுகத்தூர் சந்தையில் தொடர் மழையால் 50 ஆடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்தது