×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் காலை உணவு திட்டம்: கலெக்டர் ஆர்த்தி தகவல்

காஞ்சிபுரம், மே 11: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் காலை உணவு வழங்கப்படும் என கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக, பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகள் என அனைத்து பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளது.

இதனால் அனைத்து ஊரக, பேரூராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள ஒவ்வொரு பள்ளிக்கும் மகளிர் சுய உதவிக்குழுவில் உறுப்பினராகவும் மற்றும் அதே பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளின் பெற்றோராகவும் உள்ள 3 பெண்கள் சமையல் பொறுப்பாளராக முதன்மை குழுவினால் தேர்ந்தெடுக்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளது. சமையல் பொறுப்பாளர் பணியானது முற்றிலும் தற்காலிகமானது. மேலும், அவர்களது குழந்தைகள் 5ம் வகுப்பை தாண்டியவுடன் சமையல் பொறுப்பாளர் பணியிலிருந்து விடுவிக்கப்படுவர்.

எனவே, சமையல் பொறுப்பாளர் தேர்வு செய்யப்படும் நிகழ்வில் தகுதியற்ற நபர்கள் என எவரேனும் கண்டறியப்பட்டாலோ, கையூட்டு பெறுவதாக புகார் எதேனும் பெறப்பட்டாலோ சம்மந்தப்பட்ட நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் மூலம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், முதன்மை குழு மூலமாக தேர்வு செய்யப்பட்ட சமையல் பொறுப்பாளர் அனைவருக்கும், ஆராக்கியமான சமையலை சுகாதாரமான முறையில் செய்வது குறித்து முறையாக வட்டார அளவில் பயிற்சி அளிக்கப்பட்டு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் (விரிவாக்கம்) முதற்கட்டமாக ஜூன் மாதம் 1.6.2023 அன்றும், இரண்டாம் கட்டமாக 15.6.2023 அன்றும் செயல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் காலை உணவு திட்டம்: கலெக்டர் ஆர்த்தி தகவல் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram District ,Kanchipuram ,Kanchipuram district… ,Dinakaran ,
× RELATED பட்டா மாறுதல் கேட்டு சமூக வலைதளத்தில்...