×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபாதை உணவகங்களை ஆய்வு செய்யவேண்டும்:கலெக்டரிடம் கோரிக்கை மனு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபாதை உணவகங்களை ஆய்வு செய்யவேண்டும் என காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தியிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு ஊழல் ஒழிப்பு சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் வக்கீல் பெர்ரி, காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தியிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பலர் பணம் சம்பாதிக்கும் நோக்கில் நோய் உண்டாக்கும் தரமற்ற தின்பண்டங்களை விற்பனை செய்து வருகின்றனர். அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபாதை உணவகங்கள் அதிகளவில் செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் மளிகைக்கடைகள், தள்ளுவண்டி கடைகள், உணவகங்கள் கண்டிப்பாக உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு சான்று பெற்றிருக்கவேண்டும் என்பதை உறுதிசெய்யவேண்டும். நடைபாதை கடைகள், தள்ளுவண்டி, அசைவ உணவுகளில் சேர்க்கப்படும் பொருட்கள் மற்றும் செயற்கை சுவையூட்டிகள் ஏதேனும் சேர்க்கப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொள்ளவேண்டும். மேலும் மீன், ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, பழங்கள், காய்கறிகள், நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்காக பார்மலின், எத்திலின், பென்சோவேட் போன்றவை மூலம் பதப்படுத்தப்படுகிறதா என மாநகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தவேண்டும் அல்லது விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்யவேண்டும். அனைத்து பகுதிகளிலும் உணவகங்களில் அந்தந்த பகுதி சார்ந்த உணவு பாதுகாப்பு அதிகாரியின் பெயர், தொலைபேசி எண், வாடிக்கையாளர் சேவை மையம் எண் ஆகியவை வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். தரமற்ற பொருட்களால் குடல் புற்றுநோய், கல்லீரல், சிறுநீரகம் பாதிப்பு, இதய கோளாறு ஏற்படுகின்றன. அசைவ ஓட்டல்களில் மறுசுழற்சி செய்யப்பட்ட எண்ணெய், நோய் பாதித்த கோழிகள், நீண்டநாள் பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவு தயாரித்து விற்பனை செய்யப்படுகிறதா என்பதை வாரத்திற்கு ஒருமுறை கண்காணிக்க வேண்டும். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபாதை உணவகங்களை ஆய்வு செய்யவேண்டும்:கலெக்டரிடம் கோரிக்கை மனு appeared first on Dinakaran.

Tags : Kanchipuram district ,Kanchipuram ,Kanchipuram Collector ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED வீட்டுமனையை அளவீடு செய்யாததை...