×

கல்வி காவிமயம்

பாஜ ஆளும் மாநிலமான கர்நாடகாவில் சர்ச்சைக்கு பஞ்சமில்லை. டபுள் இன்ஜின் அரசால் கர்நாடக மாநிலம் வளர்ச்சி பாதையில் செல்கிறது என்று ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பெருமிதம் கொள்கிறார். ஆனால், அந்த மாநிலத்தில் தான் பிற்போக்கு விஷயங்கள் வெளிப்படையாகவே புகுத்தப்படுகின்றன. இதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் ஆளும் பாஜ அரசு கண்டு கொள்வதேயில்லை. இந்நிலையில், இவர்கள் கல்வியை காவிமயமாக்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது வகுப்பறையில் கூட காவி வண்ணம் பூச திட்டமிட்டுள்ளனர். இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு வர  தடைவிதித்தனர். இந்த சர்ச்சை அடங்குவதற்குள்ளாக பள்ளிப்பாட புத்தகத்தில் இருந்து திப்பு சுல்தான் வரலாற்றை நீக்க வேண்டும் என்று பாஜ எம்பிக்கள் சர்ச்சையை ஏற்படுத்தினர். கடந்த கல்வியாண்டில் திப்பு சுல்தான் குறித்த பாடத்தை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் நாகேஷ் அறிவித்தார். இதையடுத்து 7ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் இடம்பெற்றிருந்த திப்பு சுல்தான், ஹைதர் அலி குறித்த பாடங்கள் நீக்கப்பட்டது. அதே சமயம் வீரசாவர்க்கர் குறித்த வாழ்க்கை வரலாறு பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது. பல்வேறு போராட்டத்துக்கும் பிறகும் பாஜ அரசு தனது நிலையில் இருந்து மாறவே இல்லை. இதற்கிடையில், மைசூரு-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு பஸ் நிழற்குடை மசூதி வடிவத்தில் இருப்பதால் அதை இடித்து தள்ள வேண்டும் என்று சர்ச்சைக்கு பெயர் போன  பாஜ எம்பி பிரதாப் சிம்ஹா குழப்பத்தை ஏற்படுத்தினார். தற்போது, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அந்த நிழற்குடையை அகற்ற நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில், புதியதாக 1,800 கோடி செலவில் மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் கட்டப்பட இருக்கும் 7,601 வகுப்பறைகளுக்கு காவி வண்ணம் அடிப்பதுடன் விவேகானந்தரின் பெயர் சூட்டவும் கல்வி இயக்குனரகம் முடிவு செய்துள்ளது, கல்வியை காவிமயமாக்க பாஜ முயற்சிக்கிறது என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அனைத்தையும் அரசியல் கண்ணோட்டத்தில் பார்ப்பதை காங்கிரஸ் நிறுத்திக்கொள்ள வேண்டும். நாட்டின் தேசிய கொடியில் காவி வண்ணம் இல்லையா, விவேகானந்தர் பெயர் சூட்டுவதால் ஏதாவது பெருமை குறைந்துவிடப்போகிறதா என்று முதல்வர் பசவராஜ் பொம்மை சப்பைகட்டு கட்டி பதிலடி கொடுத்திருப்பது தான்  ஹைலைட். பள்ளிக்கு வரும் மாணவர்கள் சாதி, மத, இன பாகுபாடு மறந்து அனைவரும் ஒற்றுமையாக, நல்லுறவுடன்  ஓடி, ஆடி, பாடி  கள்ளம் கபடமின்றி படிக்க வேண்டிய நிலையில், ஒரு குறிப்பிட்ட மதத்தின் உணர்வை ஏற்படுத்தும் முயற்சியை பாஜ அரசு மேற்கொண்டு வருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால், நாட்டின் வரலாற்றை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சிக்கு காங்கிரஸ் முட்டுக்கட்டை போடுகிறது என்று பாஜ தலைவர்கள் விமர்சித்துள்ளனர். ஆனால் கல்வியை காவிமயமாக்கி இந்துத்வா கொள்கைகளை பாஜ திணிப்பதாக முற்போக்கு சிந்தனையாளர்கள் கண்டனக்குரல் எழுப்பி வருகின்றனர்….

The post கல்வி காவிமயம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Karnataka ,government ,
× RELATED கர்நாடகாவின் சோமண்ணாவுக்கு...