ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்களின் வேலைநிறுத்தப்போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. மீன்பிடி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மீன்பிடிக்க செல்வதாக அறிவித்துள்ளனர். இலங்கையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்க வலியுறுத்தி 3 நாட்களாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை சிறை பிடித்துள்ள மீனவர்களையும், பல கோடி மதிப்பிலான படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படை சமீபத்தில் சிறைபிடித்து சிறையில் அடைத்தது. இவர்களின் 3 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் ரூ.40 கோடி மதிப்பிலான 184 படகுகள் விடுவிக்கப்படாத நிலையில், மேலும் 3 படகுகளை பறிமுதல் செய்ததால் கடலுக்கு செல்ல மீனவர்கள் தயங்குகின்றனர்.
ராமேஸ்வரம் துறைமுக கடற்கரை அந்தோணியார் ஆலயத்திருவிழாவை முன்னிட்டு விசைப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்குச் செல்லவில்லை.இதனால் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ராமேஸ்வரம் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டன. இது தொடர்பாக மீனவர் அமைப்பினர் சார்பில் நேற்று கூட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் பல்லாயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதரத்தை கருத்தில் கொண்டு வேலைநிறுத்தத்தை அவர்கள் வாபஸ் பெற்றனர்.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!
