×

ஊட்டியில் உள்ள பழமை வாய்ந்த பி1 காவல் நிலைய கட்டிடத்தை டிஜிபி பார்வையிட்டார்

ஊட்டி, மே 27: ஊட்டியில் உள்ள பழமை வாய்ந்த பி1 காவல் நிலைய கட்டிடத்தை, தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு பார்வையிட்டார். நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரின் மத்தியில் நகர மத்திய காவல் (பி1) நிலையம் பழைமையான கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. கடந்த 1850ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இக்கட்டிடம் 1860 முதல் காவல் நிலையமாக செயல்பட துவங்கியது. அக்கால கட்டத்தில் மாப்ளா ரெபல்ஸ் என்ற இயக்கத்தினர் அண்டை மாநிலமான கேரளா மற்றும் கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்தனர். அவர்கள் 1921-ல் இக்காவல் நிலையத்தில் பணியில் இருந்த ஒரு ஆய்வாளர், ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் இரு காவலர்கள் என 4 பேரை கொன்றனர். வீர மரணமடைந்த அந்த காவல்துறையினரின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு இக்கட்டிடத்தில் அமைக்கப்பட்டு இன்றளவும் உள்ளது.

கடந்த 2005ம் ஆண்டு இந்த பழமை வாய்ந்த கட்டிடத்தை இடித்துவிட்டு அப்பகுதியில் மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் காவல் நிலைய கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டது. ஆனால் பழமை வாய்ந்த கட்டிடத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்தது. இதனை தொடர்ந்து கட்டிடத்தை இடிக்கும் பணி கைவிடப்பட்டு அருகில் உள்ள காலி இடத்தில் புதிய காவல் நிலையம் கட்டப்பட்டு கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் செயல்பட துவங்கியது. பழைய காவல் நிலைய கட்டிடத்தை அருங்காட்சியகமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் காலம் துவங்கி தற்போதை காலம் வரையிலான காவல்துறை சார்ந்த புகைப்படங்கள், வன உயிரின புகைப்படங்கள், பழங்குடியின மக்களின் கலாசாரம், இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த புகைப்படங்கள் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பொதுமக்களும் தங்களிடம் உள்ள பழமை வாய்ந்த காவல்துறை புகைப்படங்கள், நினைவு பொருட்கள், வரலாற்று பொருட்கள், காவல்துறை நிகழ்வுகள் குறித்த சான்றுகள், சீருடை ஆயுதங்கள் ஆகியவற்றை காவல்துறை அருங்காட்சியகத்தில் வைக்க ஒப்படைக்கலாம் என கேட்டு கொள்ளப்பட்டது. ஆனால் அதன் பின்னர் பி1 பழைய கட்டிடத்தை அருங்காட்சியகமாக மாற்றும் திட்டம் செயல்பாட்டிற்கு வரவில்லை. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு வந்த தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு இந்த பழைமை வாய்ந்த காவல் நிலைய கட்டிடத்தை பார்வையிட்டு, அங்கு உயிர்நீத்த காவல்துறை அதிகாரிகள் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளையும் பார்வையிட்டார். டிஜிபி ஆய்வு செய்த நிலையில் இந்த பழமையான காவல் நிலைய கட்டிடம் அருங்காட்சியகமாக மாற்றப்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த ஆய்வின் போது நீலகிரி எஸ்பி பிரபாகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post ஊட்டியில் உள்ள பழமை வாய்ந்த பி1 காவல் நிலைய கட்டிடத்தை டிஜிபி பார்வையிட்டார் appeared first on Dinakaran.

Tags : DGP ,P1 police station ,Ooty ,Tamil ,Nadu ,Shailendra Babu ,ancient P1 police station ,
× RELATED பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்...