×

உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம்: சுந்தர் எம்எல்ஏ திறந்து வைத்தார்

 

மதுராந்தகம், ஆக.27: உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம், பினாயூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை சுந்தர் எம்எல்ஏ திறந்து வைத்தார். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம், பினாயூர் கிராமத்தில் கோடை மழையை நம்பியும், கிணற்றுப் பாசனம் மற்றும் ஆழ்துளை கிணறு உள்ளிட்ட நீர் ஆதாரம் மூலமாக பாசனம் செய்தும் ஏராளமான விவசாயிகள் கோடையில் 2வது போகம் நெற்பயிர் நடவு செய்தனர். அதன் அறுவடை தற்போது தொடங்கியுள்ளது. எனவே, அறுவடை செய்யப்படும் நெல்லை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏவிடம் மனு கொடுத்தனர்.

அதன்படி, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சாலவாக்கம் குமார் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் அனைவரையும் வரவேற்றார். இதில், சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர், சுந்தர் எம்எல்ஏ பேசுகையில், ‘தனியார் வியாபாரிகளிடம் விவசாயிகள் நெல்லை விற்பனை செய்து நஷ்டம் அடைந்து வந்தனர்.

தற்போது, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்து, லாபம் ஈட்டும் வகையில் நெல்லின் விலையை உயர்த்தி வழங்கியுள்ளார். இதனால், அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல் வழங்கிய விவசாயிகள் அனைவரும் லாபம் அடைந்துள்ளனர்’ என்றார். இந்த நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் சாத்தநஞ்சேரி, சீத்தநஞ்சேரி, குருமஞ்சேரி, பழவேரி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகளிடமிருந்து 550க்கும் மேற்பட்ட ஏக்கர் நெல் மூட்டைகள் நேரடியாக கொள்முதல் செய்யப்பட உள்ளது.

இதனால், அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்இந்நிகழ்ச்சியில், மாவட்ட கவுன்சிலர் சிவராமன், அறங்காவலர் குழு தலைவர் வெங்கடேசன், கவுன்சிலர் பவுன் சின்ராஜ், பாலமுருகன், விஷ்ணு, நந்தா பன்னீர் செல்வம், உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள், பொதுமக்கள், விவசாயிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம்: சுந்தர் எம்எல்ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Uttaramerur ,panchayat ,union ,Sundar ,MLA ,Madhurantagam ,Pinayur village ,Uthramerur panchayat union ,
× RELATED மரக்கன்றுகள் நடல்