ராமநாதபுரம், மே 5: அக்னி நட்சத்திரம் தொடங்கியதையடுத்து, உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் மூலவருக்கு மூலிகை தாராபிஷேகம் தொடங்கி மே 29 வரை நடைபெறுகிறது. கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கி வரும் 29ம் தேதி வரை நீடிக்கிறது. அக்னி நட்சத்திர காலத்தில் சிவன் கோயில்களில் மூலவருக்கு தாராபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம்.
செம்பால் செய்யப்பட்ட தாரா பாத்திரத்தில் சந்தனம், ஜவ்வாது, பன்னீர், மூலிகை திரவம், தூய நீர் உள்ளிட்டவை கலந்த புனித நீரை மூலவரின் தலை உச்சி மீது சொட்டுச் சொட்டாக படும்படி பொருத்தப்படுகிறது. அதன்படி ராமநாதபுரம் அருகே திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் மூலவர் மங்களநாதருக்கு நேற்று அபிஷேகம் செய்து, அலங்காரம் மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் மூலவருக்கு தாராபிஷேகம் தொடங்கியது.
இதேபோன்று கடலாடி அருகே உள்ள மாரியூர் பூவேந்தியநாதர், ராமநாதபுரம் மீனாட்சி சொக்கநாதர், முகவை ஊரணி காசிவிஸ்வநாதர் கோயில், நயினார்கோவில் நாகநாதர், அபிராமம் அருகே உள்ள அ.தரைக்குடி தரணீஸ்வரர், சாயல்குடி கைலாசநாதர், டி.எம்.கோட்டை செஞ்சிடைநாதர் உள்ளிட்ட பழமையான சிவன் கோயில்களிலுள்ள தாராபிஷேகம் தொடங்கியது. இந்நிகழ்ச்சி வரும் 29ம் தேதி வரை நடைபெறும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
The post உத்தரகோசமங்கை கோயிலில் தாராபிஷேகம் தொடக்கம்: மே 29 வரை நடக்கிறது appeared first on Dinakaran.