×

இறந்தது கூட தெரியாமல் தந்தையின் அழுகிய சடலத்துடன் வீட்டிலேயே தங்கியிருந்த மகன்: வந்தவாசியில் அதிர்ச்சி

வந்தவாசி, நவ. 21: தந்தை இறந்தது கூட தெரியாமல் அழுகிய சடலத்துடன் அவரது மகன் வசித்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சண்முகம் ெதருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி(75). செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் செயலாளராக வேலை செய்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவர்களது மகன் ஆனந்தன்(45). வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென மனநிலை பாதிக்கப்பட்டதால் வங்கி பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதனால் ஆனந்தனை, அவரது தந்தை கோவிந்தசாமி பராமரித்து வந்தார். இந்நிலையில் தூய்மை பணியாளர்கள் தினமும் கோவிந்தசாமி வீட்டில் குப்பைகளை பெற்று செல்வது வழக்கம்.

ஆனால் கடந்த 5 நாட்களாக குப்பைகளை தரவில்லையாம். அவரது வீடும் உள்பக்கமாக பூட்டியே கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த தூய்மை பணியாளர்கள் நேற்று காலை, அக்கம்பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரித்தனர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர், கோவிந்தசாமி வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கோவிந்தசாமி சடலமாகவும், அருகே ஆனந்தன் உட்கார்ந்து கொண்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர் இறந்து 6 நாட்களுக்கு மேலாகியிருக்கலாம் என்பதால் சடலம் அழுகிய நிலையில் இருந்தது.

இதுகுறித்து பொதுமக்கள் வந்தவாசி தெற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் விநாயகமூர்த்தி, முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். ஆனந்தன் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதால் தந்தை இறந்தது தெரியாமல் அவரும் உணவு, தண்ணீர் இன்றி இருந்துள்ளார். இதையடுத்து போலீசார், ஆனந்தனை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post இறந்தது கூட தெரியாமல் தந்தையின் அழுகிய சடலத்துடன் வீட்டிலேயே தங்கியிருந்த மகன்: வந்தவாசியில் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Vandavasi ,Govindaswamy ,Sanmugam Etheru ,Thiruvannamalai district ,Seyyar ,
× RELATED செவிலிமேடு அருகே ரூ.100 கோடியில் நடந்து...