×

இதயத்தை வருடும் இதமான காற்று சுண்டி இழுக்கும் `ராமக்கல் மெட்டு’க்கு சுற்றுலா பயணிகள் படையெடுப்பு

மூணாறு: கொளுத்தும் கோடையில் இருந்து தப்ப, வசீகரிக்கும் சுற்றுலாத்தலமான ராமக்கல் மெட்டுக்கு தமிழகத்தில் இருந்து தினசரி சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் படையெடுக்கின்றனர். தமிழகத்தின் தேனி மாவட்டத்தை ஒட்டி அமைந்துள்ள கேரளாவின் இடுக்கி மாவட்டம் மலையும், மலை சார்ந்த இடமாக உள்ளது. உயர்ந்த மலைகள், பள்ளத்தாக்குகள், ஆங்காங்கே நீர்வீழ்ச்சிகள், காலைப்பனியில் மலை தழுவும் முகில்கள், பசுமையான தேயிலைத் தோட்டங்கள், காபி, ஏலத்தோட்டங்கள் என இயற்கை வரைந்த ஓவியமாக இம்மாவட்டம் திகழ்கிறது. இங்கு, தேக்கடியிலிருந்து மூணாறு செல்லும் சாலையில், நெடுங்கண்டத்திலிருந்து 15 கி.மீ தொலைவில், ராமக்கல் மெட்டு சுற்றுலாத்தலம் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 3,500 அடி உயரத்தில் அமைந்துள்ள இப்பகுதியில் பச்சைப்பசேல் என மலைகள், சிலுசிலுக்கும் இதமான இதயத்தை வருடும் குளிர்காற்று சுற்றுலாப் பயணிகளை சுண்டி இழுக்கிறது. தற்போது கேரளத்தில் இருந்தாலும் சங்க காலத்தில் தமிழகத்தின் குறிஞ்சி நிலப்பரப்பாக இருந்ததை நினைவுபடுத்தும் வகையில் குறவன், குறத்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது. கேரள மாநில பறவையான மழை முழக்கி வேழாம்பல், கிளைகள் இல்லாத காய்ந்த தாவரத்தை வாயில் கவ்வியது போல வடிவமைத்துள்ளனர். இது, மனிதன் இயற்கையை பாதுகாக்கவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.இங்கிருந்து பார்த்தால் தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம், தேனி, தேவாரம், உத்தமபாளையம், போடிநாயக்கனூர் உள்ளிட்ட நகரங்களையும், கிராமங்களையும் பார்க்கலாம். சராசரியாக மணிக்கு 32.5 கி.மீ வேகத்தில் காற்று வீசும் ராமக்கல் மெட்டு, இந்தியாவில் அதிக வேகமாக காற்று வீசும் இடங்களில் ஒன்றாக திகழ்கிறது. சில சமயங்களில் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் காற்று வீசும். மலை ஏற விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு உகந்த இடமாக உள்ளது.இடுக்கி மாவட்டத்தில் மூணாறு, தேக்கடி உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத்தலங்கள் இருந்தாலும் குறவன், குறத்தி சிலை, மழை முழக்கி வேழாம்பல் பறவை சிலை, சூசைட் பாயிண்ட் ஆகியவற்றை காணவும், 3,500 அடி உயரத்தில் இருந்து தேனி மாவட்டத்தின் பரந்த நிலப்பரப்பை ரசிக்கவும், தற்போது கொளுத்தும் கோடை வெயிலில் இருந்து தப்பவும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தமிழகத்தில் இருந்து தினசரி இங்கு வந்து குவிகின்றனர்….

The post இதயத்தை வருடும் இதமான காற்று சுண்டி இழுக்கும் `ராமக்கல் மெட்டு’க்கு சுற்றுலா பயணிகள் படையெடுப்பு appeared first on Dinakaran.

Tags : ``Ramakal Mettu'' ,Munnar ,Tamil Nadu ,Ramakal Mettu ,
× RELATED காடுகளில் உணவு கிடைக்காமல் எஸ்டேட்...