×
Saravana Stores

ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ஆர்.எஸ்.மங்கலம், செப். 28: ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் 35 கிராம ஊராட்சிகள், பேரூராட்சி ஆகியவை உள்ளன. இவற்றிற்கு உட்பட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான உப்பூர், கடலூர், சித்தூர்வாடி, வெட்டுக்குளம், கலங்காபுலி, ஆவரேந்தல், பாரனூர், சோழந்தூர், வட வயல், மங்கலம், கலக்குடி, செங்குடி, பூலாங்குடி, குயவனேந்தல், பணிதிவயல், அரியான்கோட்டை, ஆப்பிராய், நத்தக்கோட்டை, நகரி காத்தான், திருத்தேர்வளை, ஆனந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளாக போதிய மழை இல்லை. இதனால் நெல் விவசாயம் பொய்த்துவிட்டது. இந்த பகுதி வானம் பார்த்த பூமி என்பதால் அதிக மழை பெய்தால் மட்டுமே ஓரளவு விவசாயம் நடைபெறுகிறது. இதனால் மற்ற காலங்களில் பிழைக்க வழியின்றி மக்கள் அவதிப்படுகின்றனர்.

இதனால் இந்த பகுதியினர் கருவேல மரங்களை பயன்படுத்தி கரிமூட்டம் போடும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பகுதியில் விறகுக்காக வெட்டப்படும் காட்டு கருவேல மரங்கள் லாரிகளில் ஏற்றி திருப்பூர், கருர் உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. மேலும், பலர் இந்த மரத்தை கரிமூட்டம் போட்டு வருவாய் ஈட்டி பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்த பகுதியில் வேலைவாய்ப்புக்கு ஆலைகளோ, பெரிய தொழில் நிறுவனங்களோ இல்லை. இதனால் படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக திருப்பூர், கோவை, சென்னை போன்ற நகரங்களுக்கு செல்கின்றனர். எனவே, இந்த பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின் நலன்கருதி ஆலைகள் அமைக்கவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் தமிழக அரசு ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : RS Mangalam ,RS Mangalam taluk ,Dinakaran ,
× RELATED ஆற்றை ஆக்கிரமித்த கருவேல மரங்களை அகற்றி தடுப்பணை அமைக்க வேண்டும்