நாமக்கல், பிப்.25 நாமக்கல் வழியாக இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரின் பேரில், போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சேலத்தில் இருந்து நாமக்கல் வழியாக இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பஸ்களில், பயணிகளிடம் கூடுதல் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், புதுச்சத்திரம் ஊருக்குள் பஸ்கள் செல்லாமல் தேசிய நெடுஞ்சாலையிலேயே செல்வதாகவும், மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, நாமக்கல் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சக்திவேல், நித்யா, சரவணன் ஆகியோர், நாமக்கல்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர்.
அப்போது, ஆண்டகளூர் கேட் மற்றும் புதுச்சத்திரம் பகுதியில், பஸ்களை நிறுத்தி சோதனை செய்தனர். பஸ்களில் பயணம் செய்தவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுகிறதா என கேட்டறிந்தனர். மேலும், அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளதா என சரிபார்த்தனர். இந்த சோதனையின்போது, பல்வேறு குறைபாடுகள் காணப்பட்ட 4 பஸ்களுக்கு, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சோதனை அறிக்கை அளித்தனர்.
மேலும், ஒரு பஸ்சில் கூடுதல் கட்டணம் பெறப்பட்டது தெரியவந்தது. அந்த பஸ்சின் உரிமையாளரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள்
தெரிவித்தனர்.
The post அரசு, தனியார் பஸ்களில் அதிகாரிகள் சோதனை appeared first on Dinakaran.