சென்னை : தமிழ்நாடு பிரிமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 தொடரின் 3வது சீசன், திருநெல்வேலியில் இன்று தொடங்குகிறது. கடந்த 2016ம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வரும் இந்த தொடரில், மொத்தம் 8 அணிகள் களமிறங்குகின்றன. முதல் சீசனில் தூத்துக்குடி அணியும், 2017ல் நடைபெற்ற 2வது சீசனில் சேப்பாக்கம் அணியும் சாம்பியன் பட்டம் வென்றன. இந்நிலையில், 3வது சீசன் நெல்லையில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. திருச்சி வாரியர்ஸ், காஞ்சி வீரன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், காரைக்குடி காளை, சேப்பாக் சூப்பர் கில்லிஸ், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், மதுரை பேந்தர்ஸ், கோவை கிங்ஸ் என 8 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம் 32 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. முதல்முறையாக இந்த சீசனில் ஒவ்வொரு அணியிலும் தலா 2 வெளிமாநில வீரர்கள் விளையாட உள்ளனர். முதல் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் - திருச்சி வாரியர்ஸ் அணிகள் இன்று மாலை திருநெல்வேலியில் நடக்கும் போட்டியில் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நேற்று முன்தினம் தொடங்கியது. இணையதளத்திலும் டிக்கெட்கள் விற்கப்படுகின்றன.
போட்டிகள் திருநெல்வேலி , திண்டுக்கல், சென்னை ஆகிய இடங்களில் நடைபெறும். லீக் சுற்றின் முடிவில் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகளுக்கு இடையே குவாலிபயர் 1 போட்டி ஆக.7ம் தேதி நடக்கும். இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் 3வது, 4வது இடம் பிடித்த அணிகள் மோதும் எலிமினேட்டர் போட்டி ஆக.8ம் தேதி நடைபெறும். குவாலிபயர் 1ல் தோற்ற அணி, வெளியேறும் சுற்றில் வென்ற அணியுடன் மோதும் 2வது குவாலிபயர் போட்டி ஆக.10ம் தேதி நடக்கும். இறுதிப்போட்டி ஆக.12ம் தேதி சென்னையில் நடைபெறும். சென்னையில் நடைபெறும் 4 போட்டிகளும் சேப்பாக்கம் சிதம்பரம் விளையாட்டரங்கில் நடைபெற உள்ளன. தினமும் போட்டிகள் இரவு 7.15 மணிக்கு தொடங்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 3.15 மணிக்கும், இரவு 7.15 மணிக்கும் என 2 போட்டிகள் நடைபெறும். முதலிடம் பெறும் அணிக்கு ஒரு கோடி ரூபாயும், 2ம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹60 லட்சம், 3ம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹40 லட்சம் வழங்கப்படும். மற்ற அணிகளுக்கு தலா ₹25 லட்சம் கிடைக்கும்.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!
