×

அடிக்கடி பழுதாகி நிற்பதால் அரசு டவுன் பஸ்களை மாற்ற வேண்டும்: கிராமமக்கள் வலியுறுத்தல்

திருவாடானை, ஏப்.7: திருவாடானை பகுதி கிராமப்புறங்களில் மோசமான நிலையில் இயக்கப்படும் அரசு டவுன் பஸ்களை மாற்ற வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் அரசு பேருந்துகள் கட்டணத்திற்கு ஏற்ப பல்வேறு வசதிகளுடன் இயக்கப்படுகிறது. நகரங்களை பொருத்தமட்டில் தனியாருக்கு சவால் விடும் வகையில் புதிய பேருந்துகளை அரசு போக்குவரத்து கழகம் இயக்கி சாதனை படைத்து வருகிறது. அதேபோல் கிராமங்களுக்கு அரசு டவுன் பஸ்கள் குக்கிராமங்களுக்கு கூட இயக்க இயக்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசு மற்ற மாநிலங்களை விட குறைந்த கட்டணத்திலும், அனைத்து கிராமங்களையும் இணைத்து நகர் பகுதிக்கு தங்குதடையின்றி கிராம பொதுமக்கள் சென்றுவர சிறந்த போக்குவரத்து சேவையை செய்து வருகிறது. இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவில் கிராமப்புற மாணவ,மாணவிகள் தங்களது அடிப்படை மற்றும் உயர்கல்வியைப் பெற இலவச பஸ் பாஸ் வழங்கி சேவை செய்து வருகிறது. மேலும் புதிதாக பொறுப்பேற்ற உடன் இந்த அரசு பெண்களுக்கு டவுன் பஸ்களில் இலவச பயணத்தை அனுமதித்து உத்தரவிட்டதன் மூலம் ஆயிரக்கணக்கான வேலைக்குச் செல்லும் பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.

லாபம் மட்டுமே குறிக்கோளாக செயல்படாமல் பொதுமக்களின் வசதிக்காக தங்கு தடையின்றி போக்குவரத்து நடந்திட வேண்டும். நகர்ப்புறத்தையும், கிராமபுறத்தையும் இணைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் அரசு போக்குவரத்து கழகம் பேருந்துகளை இயக்கி வருகிறது. அதேபோன்று கிராமங்களில் நடைபெறும் அம்மன் கோயில் திருவிழாக்கள் வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் சிறப்பு பேருந்துகள் போன்றவைகளும் மக்களுக்காக இயக்கப்படுகிறது. இவையெல்லாம் சிறப்பாக செயல்பட்ட போதிலும் கிராமங்களுக்கு இயக்கப்படும் அரசு டவுன் பஸ்கள் மிகவும் பழைய மோசமான கண்டிஷனில் உள்ள பஸ்கள் இயக்கப்படுகிறது.

இதனால் இந்த பேருந்துகளில் பயணிக்கவே மக்கள் அச்சப்படும் நிலை உள்ளது. அதிலும் குறிப்பாக திருவாடானை பகுதியில் இருந்து கள்ளிக்குடி, திருவெற்றியூர், கோவிந்தமங்கலம், ஆனந்தூர், ஆர்.எஸ். மங்கலம், தேவகோட்டை, சோழந்தூர், கொக்கூரணி, வெள்ளையபுரம், காரங்காடு, உப்பூர், சிறுமலைக்கோட்டை போன்ற ஊர்களுக்கு 13 அரசு டவுன் பஸ்சுகள் இயக்கப்படுகிறது. இந்த டவுன் பஸ்கள் அனைத்தும் ஏற்கனவே பல ஆண்டுகள் நகர் பகுதியில் இயக்கப்பட்டது தான்.பெயிண்ட் அடிக்கப்பட்டு இப்பகுதிகளிலும் பல ஆண்டுகள் ஓடி தேய்ந்து கண்டிஷன் இழந்து விட்டது. இதனால் சில சமயங்களில் ஆங்காங்கே பழுதாகி நின்று விடுகிறது.

எனவே இப்பகுதியில் இயக்கப்படும் அரசு டவுன் பஸ்கள் அனைத்தையும் மாற்றி விட்டு புதிய பேருந்து இயக்கா விட்டாலும் ஓரளவு கண்டிஷனுடன் கூடிய பஸ்கள் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானை பகுதி பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், ஓரளவு நகர்ப்புறங்களுக்கு அரசு பஸ்சுடன் தனியார் பஸ்சும் இயக்கப்படுகிறது. ஆனால் குக்கிராமங்களுக்கு அரசு பேருந்து மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் கிராமப்புற மாணவர்களும் பொதுமக்களும் அரசு டவுன் பஸ்சை நம்பியே தான் உள்ளனர். மிகவும் பழைய பேருந்துகளை இயக்குவதால் அடிக்கடி பழுதாகி நின்று விடுகிறது. மேலும் இரவு நேரங்களில் ஹெட்லைட் போதிய வெளிச்சமின்றி மங்கிய நிலையில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இதனால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிகளவில் நகர்புறங்களுக்கு மாணவர்கள் படிக்கச் செல்ல இந்த டவுன் பஸ்களை நம்பித்தான் உள்ளனர். அடிக்கடி பழுதாகி நிற்கும்போது உரிய நேரத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு செல்ல முடியவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு இப்பகுதியில் இயக்கப்பட்ட பஸ்களை எதையும் மாற்றவில்லை. கிராமப்புறங்களுக்கு ஒரு சேவையாகத்தான் அரசு டவுன் பஸ்சை இயக்குகிறது. அந்த சேவையின் ஒரு பகுதியாக ஓரளவு கண்டிஷனுடன் இயங்கக்கூடிய டவுன் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

The post அடிக்கடி பழுதாகி நிற்பதால் அரசு டவுன் பஸ்களை மாற்ற வேண்டும்: கிராமமக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Govt ,Thiruvadanai ,Dinakaran ,
× RELATED தொப்பூர் கணவாயில் மோதுவது போல்...