கிளாஸ்கோ: 23வது காமன்வெல்த் போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 10வது நாளான நேற்று இந்தியா 8 தங்கம் உள்பட 16 பதக்கங்களை அள்ளியது. குத்துச்சண்டையில் மகளிர் 54 கிலோ எடை பிரிவில் பிரீத்தி பவார், 57 கிலோ எடை பிரிவில் ஜெய்ஸ்மின் லம்போரியா தங்கம் வென்றனர். மகளிர் 70 கிலோ எடை பிரிவில் அருந்ததி சவுத்ரி, 5-0 என இங்கிலாந்தின் சாண்டெல் ரீட்டை வீழ்த்தி தங்கத்தை முத்தமிட்டார்.
மற்றொரு வீராங்கனையான பிரியா கங்காஸ் 60 கிலோ எடை பிரிவில் இறுதி போட்டியில் கனடாவின் மேரி பத்தவுல் அல் அஹ்மதியாவை 4-1 என வென்று இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் பெற்றுக்கொடுத்தார். மகளிர் 51 கிலோ எடை பிரிவில் 23 வயதான இந்தியாவின் சாக்ஷி சவுத்ரி 5-0 என இங்கிலாந்தின் ரூபி ஒயிட்டை சாய்த்து தங்கத்தை கைப்பற்றினார்.
இரவு 11 மணிக்கு நடைபெற்று ஆடவர் 60 கிலோ எடை பிரிவு குத்துச்சண்டை பைனலில் அரியானாவை சேர்ந்த 26 வயதான சச்சின் சிவாக், நமீபியாவின் டிரையாகின் மார்னிங் என்ட்வெலோவை எதிர்கொண்டார். சமபலத்துடன் நடந்த இந்த போட்டியில் 3-2 என சச்சின் சிவாச் வென்று தங்கத்தை தனதாக்கினார். நள்ளிரவு 11.30 மணிக்கு நடைபெற்ற 80 கிலோ எடை பிரிவு பைனலில் அரியானாவைச் சேர்ந்த 20 வயதான அங்குஷ் பங்கால், இங்கிலாந்தின் டிமேஜி ஷிட்டுவை எதிர்கொண்டார். கடுமையானப் போராட்டத்திற்குப் பிறகு நடுவர்களின் பிரித்தறியும் தீர்ப்பின்படி 4-1 என்ற புள்ளிக் கணக்கில் அங்குஷ் பங்கால் வென்று தங்கம் கைப்பற்றினார். இவை தவிர குத்துச்சண்டையில் லவ்லினா போர்கோஹைன், ஜடுமணி சிங், நரேந்தர் பெர்வால் ஆகியோர் வெண்கல பதக்கம் வென்றனர். குத்துச்சண்டையில் மட்டும் இந்தியா நேற்று 7 தங்கம், 3 வெள்ளி பதக்கம் வென்றது.
மாற்றுத்திறனாளிகள் பிரிவில் ஆடவர் எஃப்57 வட்டு எறிதல் போட்டியில் இந்தியா இரட்டை பதக்கம் வென்றது. சோமன் ரானா தங்கம் வென்று அசத்தினார். மற்றொரு இந்திய வீரர் சுபம் ஜூயல் வெள்ளி வென்றார். மும்முறை தாண்டுதலில் தமிழகத்தைச் சேர்ந்த பிரவீன் சித்ரவேல் இந்தியாவிற்கு வெள்ளி பதக்கம் வென்று கொடுத்தார். மற்றொரு தமிழக வீரர் செல்வா பிரபு திருமாறன் வெண்கலம் வென்றார்.இவை தவிர 5ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் குல்வீர்சிங் வெண்கலம் வென்றார். அவர் 13 நிமிடங்கள் 24.95 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்தார்.
10ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் குல்வீர்சிங் வெள்ளி வென்றது குறிப்பிடத்தக்கது. 10 நாள் முடிவில் இந்தியா 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 39 பக்கத்துடன் 4வது இடத்திற்கு முன்னேறியது. ஆஸ்திரேலியா மொத்தம் 153, இங்கிலாந்து 101, கனடா 59 பதக்கங்களுடன் முதல் 3 இடத்தில் உள்ளன.
