இந்திய எல்லைக்கு அருகிலுள்ள தன்னுடைய விமானப்படை தளங்களில் J-20 ரக ‘ஸ்டெல்த்’ (எதிரி ரேடார்களில் சிக்காத) போர் விமானங்களை நிலைநிறுத்தும் போக்கை சீனா அதிகரித்துள்ளது. இந்திய எல்லைக்கு மிக அருகில் உள்ள ஒரு விமானப்படை தளத்தில் குறைந்தது பதினொன்று J-20 போர் விமானங்கள் நிறுத்தப்பட்டிருப்பதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.
நம் நாட்டை இலக்காக கொண்டு முதல்முறையாக ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை சீனா நிலைநிறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இந்திய விமானப்படையில் ரஃபேல் மற்றும் சுகோய்-30 எம்கேஐ போன்ற 4 மற்றும் 4.5 தலைமுறை போர் விமானங்களே பயன்பாட்டில் உள்ளன.
5-ஆம் தலைமுறை போர் விமானங்கள் எதுவும் தற்போது இந்தியாவில் செயல்பாட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் இந்தியாவை இலக்காகக் கொண்டு, 5வது தலைமுறை போர் விமானங்களை சீனா நிலைநிறுத்தி உள்ளது, இந்தியாவிற்கான அச்சறுத்தலாகவே கருதப்படுகிறது.
லடாக்கிற்கு மிக அருகில் உள்ள ஹோடன் விமான தளத்தில் ஏழு J-20 விமானங்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. அதே போல அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதிக்கு அருகில் உள்ள டாம்சுங் விமான தளத்தில் நான்கு J-20 விமானங்கள் நிறுத்தப்பட்டு உள்ளதை சமீபத்திய சாட்டிலைட் படங்கள் உறுதி செய்கின்றன.
J-20 விமானங்களின் ஸ்டெல்த் வடிவமைப்பு காரணமாக, சாதாரண இந்திய ரேடார்களால் இவற்றை எளிதில் கண்டறிய முடியாது. இதனால் இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகள் கண்டறியும் முன்பே தாக்கும் திறனை இவை பெற்றுள்ளன. இதனிடையே நாட்டின் சொந்த ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானமான AMCA இன்னும் உருவாக்க கட்டத்திலேயே உள்ளது. இது பயன்பாட்டிற்கு வர இன்னும் குறைந்தது 10 ஆண்டுகள் ஆகலாம். இந்த சூழலில் அவசியம் ஏற்பட்டால் அவசர தேவைக்காக ரஷ்யாவின் Su-57 அல்லது அமெரிக்காவின் ஐந்தாம் தலைமுறை விமானங்களை வாங்குவது குறித்தும் பாதுகாப்பு வல்லுநர்கள் ஆலோசித்து வருகின்றனர்.
