×

5, 10 கிலோ காஸ் சிலிண்டர்களுக்கு விரைவு வீட்டு விநியோக சேவை: இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகம்

 

சென்னை: இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் சாஹ்னே, நிறுவனத்தின் இயக்குநர் சவுமித்ரா ஸ்ரீவஸ்தவா மற்றும் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில், இண்டேன் எக்ஸ்ட்ராலைட் நவ் என்ற புதுமையான 10 கிலோ கலவை எல்பிஜி சிலிண்டரையும், அதனுடன் இணைந்த விரைவு வீட்டு விநியோக சேவையையும் நேற்று அறிமுகப்படுத்தினார்.இந்த சிலிண்டரின் வெளிப்படையான உடல் அமைப்பின் மூலம் எரிவாயு இருப்பை எளிதாகக் கண்காணிக்க முடியும்.

மேலும், முன்பதிவு செய்த நான்கு மணி நேரத்திற்குள் விரைவு விநியோகம், வாடிக்கையாளர்கள் விரும்பும் நேரத்தில் விநியோகம் மற்றும் குறைந்த ஆவண நடைமுறைகள் போன்ற சிறப்பம்சங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. இந்த நிகழ்வின் போது, மிகவும் பிரபலமான 5 கிலோ இண்டேன் சோட்டு சிலிண்டருக்கும் முன்பதிவு செய்த நான்கு மணி நேரத்திற்குள் வீட்டு விநியோக சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.

நகர்ப்புற குடும்பங்கள், பணியாளர்கள் மற்றும் சிறிய குடும்பங்களின் தேவைகளுக்கு ஏற்ப நெகிழ்வான மற்றும் வசதியான எல்பிஜி சேவைகளை வழங்கும் இந்தியன் ஆயிலின் உறுதிப்பாட்டை இந்த முயற்சி மேலும் வலுப்படுத்துகிறது. இதுகுறித்து இந்தியன் ஆயில் தலைவர் ஏ.எஸ்.சாஹ்னே கூறுகையில், இண்டேன் எக்ஸ்ட்ராலைட் நவ், மேம்பட்ட கலவை சிலிண்டர் தொழில்நுட்பத்தையும், தடையற்ற மற்றும் மேம்பட்ட சேவை முறையையும் இணைத்து, புத்திசாலித்தனமான, பாதுகாப்பான மற்றும் அதிக வசதியான எல்பிஜி அனுபவத்தை வழங்குகிறது. எதிர்காலத்திற்கேற்ற எரிசக்தி தீர்வுகளை வழங்குவதிலும், வாடிக்கையாளர் சேவையில் புதிய தரநிலைகளை உருவாக்குவதிலும் இந்தியன் ஆயில் உறுதியாக செயல்படுகிறது என்பதை இந்த அறிமுகம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது, என்றார்.

இந்தியன் ஆயில் இயக்குநர் (மார்க்கெட்டிங்) சவுமித்ரா ஸ்ரீவஸ்தவா கூறுகையில், இந்த சேவை முதற்கட்டமாக புனே, குருகிராம், இந்தூர் மற்றும் கோயம்புத்தூர் நகரங்களில் அறிமுகப்படுத்தப்படுகிறது. தொடர்ந்து வரும் ஆகஸ்ட் மாதம் மத்தியிலிருந்து மேலும் 25 நகரங்களுக்கும், அக்டோபர் இறுதிக்குள் நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். வாடிக்கையாளர்கள் இந்தியன் ஆயில் ஒன் செயலி மற்றும் இந்தியன் ஆயில் வாடிக்கையாளர் இணையதளம் மூலம் புதிய இணைப்புகளைப் பெறவும், ரீபில் முன்பதிவு செய்யவும் முடியும். விரைவில் 7588888824 என்ற வாட்ஸ்அப் எண்ணின் மூலமும் முன்பதிவு வசதி அறிமுகப்படுத்தப்படும். இந்தியன் ஆயிலின் பரந்த இண்டேன் விநியோகஸ்தர் வலையமைப்பு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியன் ஆயில் சில்லறை விற்பனை நிலையங்கள் மூலமாக இந்த சேவை வழங்கப்படும் என கூறினர்.

Tags : Indian Oil ,Chennai ,Sahne ,Soumitra Srivastava ,
× RELATED ஆசியாவிலேயே மிகப்பெரிய சந்தையான...